வேட்புமனு தாக்கல் 17ம் திகதி அறிவிப்பு-

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தை எதிர்வரும் 16 அல்லது 17ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாகாண சபைகளுக்கும் 2013ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைகளின் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் வர்த்தமானி அறவிப்பு இவ்வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 16 அல்லது 17ம் திகதிகளில் இந்த இரண்டு மாகாணங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடவுள்ள உறுப்பினர்களின் தொகை, பெயர் குறித்து நியமனம் செய்ய வேண்டிய வேட்பாளர்கள் தொகை, சுயேச்சையாகக் கட்டுப்பணம் செலுத்துபவர்கள் பற்றிய விபரங்கள் இதன் போது வெளியிடப்படும். அலுவலக நாட்களில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வேட்பு மனுக்களை பார்க்கக் கூடிய இடங்கள் தொடர்பிலும் விளக்கப்படும். குறித்த தினத்திலிருந்து 14 நாட்களில் ஆரம்பித்து 21ம் நாள் நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகின்ற வேட்பு மனுக்காலம் பட்டியலில் தெரிவிக்கப்படும். இதற்கிணங்க 16ம் திகதி வேட்புமனு தாக்கல் தொடர்பில் அறிவிக்கப்பட்டால் 30ம் திகதியும் 17ம் திகதி அறிவிக்கப்பட்டால் 31ம் திகதியும் இதற்கான காலமாக அமையும். 2009ம் ஆண்டிற்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் மேலதிக வாக்காளர் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது என செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.