திருக்கேதீஸ்வரத்தில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்-
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி மீண்டும் நாளைய தினம் அகழப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் கோயில் வளாகப் பாதையில் நீர்க்குழாய் பொருத்தும் பணிகளின் பொருட்டு தோண்டப்பட்ட போது, மனித எலும்புகள் கண்டுபிடிப்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இவ்வாறாக இதுவரையில் ஆறு தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் 30 மனித எலும்பு கூடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம்-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளது. நான்கு நாட்கள் தங்கியிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதிமுதல் 21ம் திகதி வரையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஸ்கந்தபுரம் வித்தியாலயம், இயனர்புரம் வித்தியாலயம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. 1982ம் ஆண்டு முதல் இதுவரையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணை நடத்தப்பட உள்ளது.
தேரர்களால் இன ஒன்றுமையை கட்டியெழுப்ப முடியும்-பொன்சேகா-
தேசிய ஒன்றுமையை கட்டியெழுப்ப தேரர்களுக்கும் பங்களிப்புச் செய்ய முடியும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயக பிக்கு அமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எண்ணும் வகையில் நிரந்தர சமாதான நாடாக திகழ, கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு, எதிர்காலத்தில் பிரச்சினை தோன்றாமல் இருப்பதற்கு தேரர்கள் தலைமைத்துவம் ஏற்க முடியும் என்று கருதுகின்றோன். தேரர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் நாட்டின் இன ஒற்றுமை, சமய ஒன்றுமை என்பவற்றை பேணி, நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருமலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மீட்பு-
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இதேவேளை, குறித்த கடற்பகுதியில் நேற்று மேலும் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பற்றப்பட்டுள்ளனர். ஏறாவூர் பகுதியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த சிறுவர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் முறைப்பாடு-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரன்தெணிய கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடுதிரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் எனவும், கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.
வெலிக்கடை கைதிகள் கொலை தொடர்பான அறிக்கை-
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை தனது கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் கையளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தப்பத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குணசேன தேனபது மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சட்ட ஆலோசகர் லலித் அந்தாஹெந்ததி அடங்கிய மூவர் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்கள் ஒப்படைப்பு தற்காலிக இடைநிறுத்தம்-
கடல் சீற்றம் காரணமாக இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 52 இலங்கை மீனவர்களையும், சர்வதேச கடல் எல்லையில் இரு நாட்டு கடற்படையிடமும் பரஸ்பரம் இன்றையதினம் ஒப்படைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மறு அறிவிப்பு வரும்வரையில் மீனவர்களை ஒப்படைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்திய சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதைப் பொறுத்து, மீதமுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விரைவுத் தபால் சேவையை முன்னெடுக்க விசேட செயற்திட்டம்-
விரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்தள்ளது. நாட்டில் உள்ள எந்தவொரு பகுதிக்கும் 24 மணித்தியாலங்களுக்குள் கடிதங்களை விநியோகிக்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இச்சேவையின் நாட்டின் பிரதான நகரங்களில் அனுப்பப்படும் பொதிகள் மறுநாள் மதியத்திற்கு முன்னதாக பெறக்கூடியதாகவும் ஏனைய பிரதேசங்களில் இரண்டு நாட்களிலும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் ஊடாக முன்னரை விடவும் அதிகளவிலானவர்கள் பயனைப் பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடுநிலையாக பார்க்க வேண்டும்-ஹக்கீம்-
யுத்த காலத்தில் இலங்கை இடம்பெற்ற போர்க் குற்றங்களை முஸ்லிம்கள் நடு நிலையாக இருந்து பார்க்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் நாட்டில் இனங்களுக்கு இடையில் சகிப்புத் தன்மை ஏற்படுவதுக்கு பாரிய தடங்கலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மீலாதுன் நபி விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ரெப் அன்மையில் இலங்கைக்கு வந்தபோது, நீதி அமைச்சர் என்ற வகையில் என்னையும் சந்தித்தார். அவர் என்னுடன் நடத்திய சந்திப்பின் போது தனது நோக்கத்தை நிரைவேற்றுவதில் அவர் உன்னிப்பாக இருந்தார். இருந்தாலும் நான் கூறிய சிலவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டார். போர் குற்றம் தொடர்பில் சிலர் அது நடந்ததாகவும் மற்றும் சிலர் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றும் இரு முனைகளில் இருந்து கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும் முஸ்லிம்கள் நடுநிலையில் இருந்து இதனை பார்க்க வேண்டும். முஸ்லிமகளுக்கு எதிராக இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்களின் பின்னால் பாரிய சதித்திட்டம் உள்ளமை நன்றாக தெரிகின்றது. ஹலால் சான்றிதல் வழங்குவதை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா நிறுத்த வேண்டும் என பொதுபலசேனா கூறியது. குறித்த செயற்பாட்டினை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இன்று நிறுத்திய பின்னர் அந்த சபையை தடை செய்ய வேண்டும் என்று பொதுபலசேன கூறுகிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் இவர்கள் முஸ்லிம்களை தனாகவே சண்டைக்கு இழுப்பதாகும். இஸ்லாம் எங்களுக்கு நடு நிலமையை வகிக்கவே கற்றுத்தந்துள்ளது. அவ்வாறான நாங்கள் இவ்வாறான சதித்திட்ஙகளில் அகப்படக்; கூடாது. ஊடகவியலாலர்கள் தமக்கென்று ஒரு ஒழுக்கக் கோவையை தயாரித்துக் கொள்ள முன்வந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம்களும் தமக்கென்று ஒரு சுய ஒழுக்ககோவையை தயாரித்து கொள்ளவேண்டும். முஸ்லிமகளை கண்காணிக்க பொதுபலசேனாவுக்கோ அல்லது வேறொரு சமூகத்திற்கோ உரிமையில்லை. நாங்களே சுயமாக அதனை செய்ய வேண்டும். இந்த சுய ஒழுக்ககோவை செயற்பட்டை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.