ஆயர்களை கைது செய்யுமாறு இராவண பலய கோரிக்கை-

ravanaஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ் ஆயர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடமே மேற்படி இரு ஆயர்களும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டீபர் ரெப் வெளியிட்ட கருத்தை நாம் மிகவும் கடுமையாகக் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ள இராவணா பலய, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே ஸ்டீபன் ரெப் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு முதல்வருக்கு புதிய அலுவலகம்-

wigneswaran_1654672gவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியிலுள்ள உள்ளூராட்சி அமைச்சின் புதிய அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்ட நிலையில், முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடன் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிதி நிறுவனங்களில் அரச கரும மொழிக் கொள்கை அமுல்-

பொதுமக்கள் அடிக்கடி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கருமமொழி கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாக அரச கருமமொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க கூறியுள்ளார். அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரச கரும மொழி ஆணைக்குழு கூறுகின்றது. மக்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படும் நிதி நிறுவனங்களில் இந்த மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசார்பற்ற நிறுவனங்களுக்கு தெளிவூட்டுமாறு மத்திய வங்கியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, மத்திய வங்கியினால் குறித்த நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அரச கரும மொழியை நடைமுறைப்படுத்துவது குறித்து மீளாய்வு செய்யவுள்ளோம் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கா ஆய்வு-

americaஇலங்கையின் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்புக் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பதிலளித்துள்ளது. நேற்றையதினம் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப்பிடம், செய்தியாளர் ஒருவர் இதுபற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நேரடியாகப் பதிலடிக்காத இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப், இந்த விவகாரங்களுக்குப் பதிலளிப்பது குறித்து இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா கூறியுள்ளது. எமது தரப்பில் எந்த முன்னேற்றங்களும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளர்.

கொழும்பில் குடும்பநல உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-

sukathara sitruliyar (4)sukathara sitruliyar (3)குடும்பநல உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆரப்பட்டம் காரணமாக கொழும்பு டீன்ஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தமக்கு வழங்கப்படும் பிரசவ பயிற்சியை தாதியர்களுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 3 வருடங்களை கொண்ட தமது பயிற்சிக் காலத்தின் ஒருபகுதியான பிரசவ தாதியர்களுக்கு வழங்கியமைக்கு எதிரப்பு தெரிவித்து குடும்பநல உத்தியோகத்தர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுமார் 2 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக டீன்ஸ் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டு போக்குவரத்து பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர்-அமைச்சர் ராஜித-

sri &indiaஇலங்கைச் சிறைகளிலுள்ள அனைத்து இந்திய மீனவர்களும், படகுகளும் இன்றுமுதல் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்கவென இந்தியா சென்றிருந்த அமைச்சர், நேற்று இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களைச் சந்தித்த பின்பே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இம்மாதம் 20ஆம் திகதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுக்களில் இலங்கை மீனவர்கள் பங்கேற்பர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இரு நாடுகளுக்குமிiடியலான கடல் வளத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பில் விவாதிக்கவென குழுவொன்று அமைக்கப்படுமென்றும், இதுபற்றி ஆராயவென ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்திய முழுமையாக பண உதவிவழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகள் நியமனம்-

kilakku pattathariகிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 332 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 81 பட்டதாரிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கென 105 பட்டதாரிகளுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கென 54 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக சிங்களமொழி மூலம் 92 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி பாடங்களை கற்பிப்பதற்காக பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் கொள்ளையர்களுடன் போராடுவதற்கு இலங்கை ஒத்துழைப்பு-

srilankaஇந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற் புலிகளை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் பெரேரா, கடந்த ஜனவரி 14ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மஸ்கற் சென்றிருந்தார். சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென் கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது. எனவே இலங்கை, வளைகுடா நாடுகளுக்கான மீள் ஏற்றுமதி மையமாக மாற முடியும். ஓமான் உட்பட வளைகுடா நாடுகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் பொருட்களை எம்மால் சிறு கப்பல்கள் மூலம் இந்த பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும் என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது: அனந்தி-

anaநான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன். இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல் கைது-

imagesCA2C7RO4வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்று திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல்லைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கட்டுநாயக்க மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தே இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கார், ஆட்களை மயக்கும் குளிசைகள், வெளிநாட்டு சாரிகள், புகைப்படக்கருவி, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த நால்வரையும் மஹர நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்களும் வேலை நிறுத்தம்-

sqவவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இப்போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அண்மைய ஊழியர்களை நிரந்தரமாக்கு, 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக கடமைக்கான உரிய கொடுப்பனவை பெற்றுக்கொடு, சீருடை கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்கு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், நோயாளர்களின் உறவினர்களே அவர்களை வைத்தியசேவைக்கு அழைத்தும் சென்றிருந்தனர். இன்றுமதியம் 12 மணிவரை இடம்பெற்ற இப்போராட்டத்திற்கு உரியபலன் கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியாக தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய வைத்தியர் உயிரிழப்பு, ஒருவரைக் காணவில்லை-

neeril moolkiதிருகோணமலை, குச்சவெளி 9ம் கட்டைப் பகுதியிலுள்ள நிலாவெளி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திருமலை, கோணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 30வயதான ஜெயரத்தினம் ரொபின்சன் என்கிற வைத்தியரே விபத்துக்குள்ளாகியுள்ளார். இவர் திருமலை வைத்தியசாலையின் வைத்தியராவார். அவரது சடலம் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை, நிலாவெளி கடலில் மூழ்கிய சிறுவன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று குடும்ப உறவினர்களுடன் நீராடச் சென்றிருந்த வேளையே இவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பத்தேகம, நயாபாமுன பிரதேசத்தில் கிங் கங்கையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவர் கோதலாவல, உடுகம பகுதியைச் சேர்ந்த 49 வயதான செல்லையா சங்கராஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று காணாமல் போன இவரைத் தேடும் பணிகளில் பத்தேகம பொலீசாரும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியை சேர்ந்தவர் பிரான்ஸில் கைது-

Jeyanathanபயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 35வயதான ஜெயநாதன் தர்மலிங்கம் பிரான்ஸ் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான வேலைவாய்ப்புகள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு சென்ற சமயத்தில் பொலிஸார் இவரை உடனடியாக அடையாளம் கண்டு கைதுசெய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும்; சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு 30ம் திகதி தொடக்கம் ஏற்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் வேட்பு மனு எதிர்வரும் ஜனவரி 30ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 6ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேநேரம் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவை சுற்றூழியர்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இவ் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான இப் பணிபகிஸ்கரிப்பு இன்றுபகல் 12 மணிவரை இடம்பெற்றுள்ளது. 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்த வேண்டும், சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கப்பட வேண்டும், 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் கடமைகளுக்கான உரிய மேலதிக நேரக்கொடுப்பணவை வழங்க வேண்டும், சீருடைக்கொடுப்பணவை ஒரே தடவையில் வழங்க வேண்டும். 5 நாட்களைக்கொண்ட வேலைவாரத்தை செயற்படுத்த வேண்டும், வாராந்த விடுமுறை நாள் ஒழிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும், பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சியை வழங்க வேண்டும், விடுமுறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்ற 8 கோரிக்கைகளை முன் வைத்து இந்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் வைத்திய தேவைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். வெளி நோயளர் பிரிவின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.