வெளிவிகார செயலாளராக ஷெனுகா நியமனம்-
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஷெனூகா செனேவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன் செயலாளராக இருந்த கருணாதிலக அமுனுமக ஓய்வு பெற்றதன் பின்னர், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஷெனூகா செனேவிரட்ன இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிவந்தார். அதற்கு முன்னர் அவர் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராகவும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன் நிவ்யோர்க் மற்றும் பிரஸல்ஸ் போன்றவற்றின் உதவி தூதுவராகவும் செயற்பட்டு வந்திருந்தார்.
350 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்-
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பட்டதாரிகள் போதிய அளவானோர் இல்லாத காரணத்தால் இலங்கையின் அனைத்து மாகாணத்திலிருந்தும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கமைய 600 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கடந்தமாதம் மாகாணசபை கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டது. இவ் நேர்முகப் பரீட்சையில் தகைமையுடைய 350 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மன்னாரில் புகைத்தலுக்கு எதிராக ஊர்வலம்-
புகைத்தலற்ற ஆரோக்கிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்திருந்த புகைத்தலுக்கு எதிரான விழிர்ப்புணர்வு ஊர்வலம் இன்றுகாலை மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன் இன்றையதினம் காலை 9.30 மணியளவில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.என்.சில்றோய் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று மீண்டும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணியினை வந்தடைந்தது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் புகைத்தலுக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலை மாணவர்கள், மருத்துவ மாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை பணியாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்-
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பெருக்கெடுத்துள்ள நீர்த் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பத்ரா கமலதாச குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு உன்னிச்சை, உருகாமம் உட்பட அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களின் சில குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், இந்த மாவட்டங்களின் ஏனைய நீர் நிலைகளின் நீர் மட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் நாளை-
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 21 நிலையங்களில் தலைமைத்துவ பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். பயிற்சிகளில் கலந்துகொண்ட பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்களை பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
111 தமிழக மீனவர்கள் விடுதலை-
முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம், நாகபட்டினத்தைச் சேர்ந்த 111 மீனவர்களும் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி 15 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இம்மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுளளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்கடத்தல்காரர்கள் இலங்கை மற்றும் வியட்நாமில் கைது-
சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர்கள் சிலர் இலங்கை மற்றும் வியட்நாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் தேசிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து தெற்கு வியட்நாம் பகுதியில் வைத்து வியட்நாம் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸாரும் ஆட்கடத்தலுடன் தொடர்புபட்ட மூவரை கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கடந்த வாரங்களில் எவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையவில்லை என அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர். படகுமூலம் சென்று அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய 1297பேர் மனுஸ் தீவிலும் 942 பேர் நௌவுரு தீவிலும் 1987 பேர் கிறிஸ்மஸ் தீவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆஸி குறிப்பிட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட இடமளிக்க முடியாது என்று, இலங்கை மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எல்பர்ட் ஜஸ்டின் சொய்சா தெரிவித்துள்ளார். நேற்று தமிழக மீனவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் த ஹிந்து பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதி வரையில் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை அனுமதிக்க முடியாது. அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுவுடன் தேசிய அடையாள அட்டை பிரதியும் அவசியம்-
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது வேட்பாளர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி இணைக்கப்பட வேண்டும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த முறை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னரான நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டதால் இம்முறை தேசிய அடையாள அட்டையின் பிரதி கோரப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து பெப்ரவரி 5ஆம் திகதிவரை சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரு மாகாண சபைகளும் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் கலைக்கப்பட்டன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. இரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 10 (1) பிரிவிற்கமைய தேர்தல் ஆணையாளர் வேட்புமனு ஏற்கும் திகதியை நேற்று அறிவித்தார். வேட்புமனு ஏற்கும் இறுதித் தினத்திலிருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட நாளில் வரும் சனிக்கிழமை ஒன்றில் இரு மாகாணங்களுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி மார்ச் மாத இறுதியில் 22 அல்லது 29 ஆம் திகதியில் தேர்தல் நடைபெறும் என தேல்தல் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. தென் மற்றும் மேல் மாகாண சபைளுக்கான தேர்தல்கள் 2013 வாக்காளர் இடாப்பின்படியே நடத்தப்பட உள்ளதோடு இம்முறை 58,88,082 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தில் இருந்து 40,14,230 பேரும் தென் மாகாணத்தில் இருந்து 21,40,498 பேரும் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தென் மாகாண சபைத் தேர்தல் மூலம் 53 பேர் தெரிவு செய்யப்பட உள்ளதோடு இரு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 55 பேர் மாகாண சபைக்கு தெரிவாக உள்ளன. மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் 102 பேர் தெரிவாக உள்ளதோடு இரு போனஸ் ஆசனங்கள் உட்பட 104 பேர் மாகாண சபைக்குத் தெரிவாக இருப்பதாகவும் தேர்தல் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஜே.வி.பி. அடங்கலான பிரதான கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஐ.ம.சு.மு. வேட்பு மனுக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி வேட்பாளர்கள் குறித்து ஆராய உள்ளது. ஐ.தே.க.வும் வேட்பு மனு குழுவொன்றை நியமித்துள்ளது.