Header image alt text

தம்பிராசாவின் சாகும்வரையான உண்ணாவிரதம் தொடர்கிறது-

1thampi..போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவருமான தம்பிராசா அவர்கள் கடந்த 16ஆம் திகதிமுதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை தெரிந்ததே.

Read more

கோயில்குளம் முதியோர் இல்ல முதியோர்க்கு உதவி-

IMG_6530IMG_6485யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டவரான 17.12.2013 அன்று இறைபதமடைந்த கிருஷ்ணர் கமலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தையொட்டி கனடாவிலுள்ள அன்னாரின் உறவுகளின் நிதியுதவியின்கீழ் கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியோர்க்கான சிறப்பு உணவும், அத்தியாவசிய பொருட்களும் நேற்றையதினம் (17.01.2014) வழங்கி வைக்கப்பட்டன. புளொட் முக்கியஸ்தரும், வவுனியா முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் மேற்படி முதியோர்க்கான சிறப்பு உணவையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளை முக்கியஸ்தர்கள் கண்ணன், ராஜா உள்ளிட்ட பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களுக்கு ‘ஆவா’ குழு கொலை அச்சறுத்தல்-

யாழில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவினரின் வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பதில் நீதவான் எம். திருநாவுக்கரசு அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற வாசலில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் ஆவா குழுவை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கமுற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என மிரட்டியதோடு ‘உங்கள் அனைவரையும் எமக்குத் தெரியும் உங்கள் வீடுகளும் தெரியும் உங்கள் அனைவரையும் வெட்டுவோம்’ என மிரட்டியுள்ளனர். உடனே ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

13ஆவது திருத்த சட்டத்தின்படி மாகாண சபைகள் நேரடி முதலீடுகளை பெற முடியும்-

13th amentmentஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வடமேல் மாகாண சபையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என பொருளாதார நிபுணரும் கொள்கை மற்றும் ஆய்வு நிலையத்; தலைவருமான சமந்த கெலேகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டின் ஆரம்ப வைவபத்தில் கலந்துகொண்டு கருத்துத் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜதந்திரிகள், பொருளாதார நிபுணர்கள், ஆலோசகர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து அணிகலன்கள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி நேற்று எட்டாவது தடவையாக தோண்டப்பட்டபோது அதிலிருந்து மேலுமொரு மனித மண்டையோட்டின் சிதைவுகள், உடைந்த காப்பு மற்றும் முத்து மணிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி, நீதவான் ஆனந்தி கனகரட்ணம், அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை மீண்டும் தோண்டப்பட்டது. இதன்போது ஒரு மனித எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகள், உடைந்த காப்பு, முத்து மணிகள் சிலவும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த புதைகுழியிலிருந்து இதுவரையில் 37 எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர்-உதய பெரேரா-

unnamed3கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இல்லை பாதுகாப்புக்காகவே இராணுவம் இங்கு நிலைகொண்டுள்ளது அங்கு இராணுவத்திற்கு தேவையான காணிகள் எடுக்கப்பட்டு ஏனையவை மக்களிடம் விரைவில் கையளிக்கப்படும். யாழில் இருந்த மினி முகாம்கள் தற்போது கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றது. விரைவில் அனைத்து மினி முகாம்களும் அகற்றப்பட்டு விடும். கிளிநொச்சியில் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைத்து கொண்டது போல எதிர்காலத்தில் யாழ்ப்பாண தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்கள் இடைநிறுத்தம்-

maaviயாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏழு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் இவர்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு எதிராக 12 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் ஐந்து ஈ.பி.டீ.பி உறுப்பினர்களை தவிர்த்து, ஏனையவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாவர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைவிலக்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தீர்மானித்துள்ளார். அதன்படி அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்கள்-

anjal vaakkalippu 1எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 20ம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம்; அறிவித்துள்ளது. இதன்படி இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதிவரையில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குறித்த இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 30ம் திகதிமுதல் அதற்கான வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவின் வாகனம் சிறைபிடிப்பு-

sarathஉரிய அனுமதி பெற்றுக் கொள்ளாமல், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு, தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட வாகனம் ஒன்றை நேற்று பொலீசார் காலி, பலபிட்டிய பகுதியில் சிறைபிடித்துள்ளனர். இந்த வாகனம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரசார வாகனம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மேற்படி பிரதேசத்தில் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டபோதும், அதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என தெரிவித்து, பொலீசார் அதனை இடைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலை தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு ஆஸி வரவேற்பு-

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத படகு பயணங்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வரவேற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட்டின் விசேட தூதுவர் மேஜர் ஜெனரல் என்ட்ரா ஜேம்ஸ் மொலான் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் கொழும்பில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத படகு பயணங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை கைதிகள் குறித்த தகவல்கள்-

imagesCAQUTQUMஇலங்கையில் உள்ள சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குறித்த விபரங்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வவுனியா காத்தான்கோட்டத்தில் மக்கள் சந்திப்பு-

IMG_7265-1024x682 IMG_7266-1024x682 IMG_7267-1024x682 IMG_7268-1024x682 IMG_7269-1024x682வவுனியா காத்தான்கோட்டத்தில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன்(விசு), புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழகத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளை முக்கியஸ்தர்களான குகன், ராஜா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இக்கலந்துரையாடலில் காத்தான்கோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கோயில் தலைவர், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்ததுடன், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின்போது மக்களின் அன்றாட பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் மற்றும் கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்-

fdffdfwwwwCaptureதைப்பொங்கல் தினத்தன்று (14.01.2014) காலை பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாண நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக வட்டுக்கோட்டை பகுதியில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலின்போது அண்மைக்காலத்தில் வடமாகாண சபை எதிர்நோக்கும் சவால்கள் பிரதேசசபைகள் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி.ஐ.நாகரஞ்சினி போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவித்திட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இக் கலந்துரையாடலின்போது வடமாகாண சபையை இயக்குவதில் திட்டமிட்டு உருவாக்கப்படும் தடைகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார். இந்த சந்திப்பில் வட்டுக்கோட்டை பகுதி கல்வியியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.