தம்பிராசாவின் சாகும்வரையான உண்ணாவிரதம் தொடர்கிறது-

1thampi..போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவருமான தம்பிராசா அவர்கள் கடந்த 16ஆம் திகதிமுதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை தெரிந்ததே.

தனது போராட்டம் தொடர்பாக தம்பிராசா அவர்கள் தகவல்-

இன்றையதினம் விசேடமாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அவர்களும், யாழ் மாவட்ட மீள்குடியேற்ற மற்றும் புனரமைப்புக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரியும் என்னை தமது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர்.
நான் அங்கு சென்று அவர்களுடன் உரையாடியபொழுது, அவர்கள் கூறினார்கள்,
நீங்கள் எங்களின் ஊடாக ஜனாதிபதிக்கு தந்த உங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தின் பிரதியினை மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சுக்கும் அனுப்பியிருந்தோம். வலி.வடக்கு மக்களின் தொகை உள்ளிட்ட அவர்களது அனைவரது விபரங்களையும், அனைத்துத் தகவல்களையும் உடனடியாக எடுத்து, அவர்களுக்கு உலருணவு வழங்குவதற்காக அனைத்து விடயங்களையும் சரிசெய்யுமாறு அங்கிருந்து எமக்கு தகவல் வந்துள்ளது.
அது சம்பந்தமாக நாங்கள் உடனடியாக அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தி, அவர்கள் ஊடாக கிராம சேவையாளர்களுக்கு தெரிவித்து அங்கிருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க ஆவன செய்வோம். நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என கோரியிருந்தனர்.
அதற்கு நான் அவர்களிடம் கூறினேன். நீங்கள் கூறிய சம்பவங்கள் அனைத்தும் நடந்து அனைத்து தகவல்களும் சரியாகப் பெறப்பட்டு அகதி மக்களுக்கு உலருணவு நிவாரணங்கள் வழங்கப்படும்போது நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன். அல்லது இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினால், அதில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் திருப்தியடைந்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி என்னிடம் கோரினால் அதன் பின்புதான் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன் என்று கூறினேன்.
இதேவேளை நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தினமான கடந்த 16ஆம் திகதியன்று மாலை 6மணிபோல் பாதுகாப்புச் செயலரின் பிரத்தியேக பிரதிநிதி ரூவான் அவர்கள் வந்து என்னைச் சந்தித்திருந்தார். இதன்போது பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உலருணவு வழங்குவது தொடர்பான உங்களது கோரிக்கை நியாயமானது என்றும், அந்த மக்கள் அனைவரையும் மீளவும் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்றுவோம், உங்களுடன் கதைத்த விடயங்களை எல்லாம் மேலிடத்திற்கு தெரியப்படுத்தி ஆவன செய்கின்றேன் என்று உறுதிகூறி உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி என்னிடம் கேட்டிருந்தார்.
இன்று மூன்றாவது நாளாகவும் எனது போராட்டத்தினை தொடர்கின்றேன் என்பதுடன், நாளையும் எனது போராட்டம் தொடரும். நன்றி. தம்பிராசா. 18.01.2014.