யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஜனாதிபதியினால் புற்றுநோய் வைத்தியசாலை திறந்துவைப்பு:-

10(1477)‘வடக்கு – தெற்கின் இணைப்பிற்கு பாலமாக ‘கலர்ஸ் ஒப் கரேச்’ நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டில் 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக 19.01.14 ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

முதலமைச்சர் .சி.வி.விக்னேஸ்வரன்

16(254)வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும் இந்த விடயத்தினை மனதிற் கொண்டு வடமாகாண மக்களிற்கு சேவை செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்கள் முன்மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும். போரால் தமிழ் குடும்பங்கள் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்களும் சொல்ல முடியாத துயரத்தினை அனுபவித்துள்ளார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைய நிகழ்விற்கு ஜனாதிபதியை அழைத்திருப்பது சாலப் பொருத்தமாக அமைந்திருக்கும்.  எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அதில், வன்முறையை விலகி முன்னேற்றல், நாட்டினை பிரிக்காது முன்னேற்றல், சமஷ்டி முறையை அனுசரித்து முன்னேறல் போன்ற தேர்தல் கொள்கையை வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  அந்தவகையில், வடமாகாண மக்களின் மனநிலையை ஜனாதிபதி புரிந்து கொண்டிருப்பார். என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே வன்முறைகளைக் களைந்து நாட்டினை பிரிவின்மைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக இணைந்து வாழ்க்கையை நடத்த வந்துள்ள எம்மக்களின் மனோநிலையை இங்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம். எமது தேவைகளைப் புரிந்து இனக்கூற்றுக்கு வித்திடுவார் என்பதுடன், புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்றும் எதிர்பார்க்கலாம். புற்றுநோய்க்கு ஆளானவர்கள் எவருடைய உதவிகளுமற்ற பரிதாப நிலைக்கு ஆளாகின்றார்கள். தம்மை தாமே பராமரித்துக் கொள்ள முடியாத நிலையை அடைகின்றனர். இதனால் மனிதாபிமானமும், சுயகௌரவமும் இழக்கப்படுகின்றது. அவ்வாறு சுயகௌரவம் இழக்கப்படும் போதும் மனித அந்தஸ்து குறைக்கப்பட்டு மனிதத்தின் அத்திவாரம் ஆட்டங்காணத் தொடங்குகின்றது. வடமாகாண மக்களின் சுயகௌரவம் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக இங்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். ஏனெனில் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்ற ரீதியிலும் நாட்டில் ஆணை பிறப்பிக்கும் சேனைத் தலைவர் என்ற ரீதியிலும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் சுயகௌரவத்தினை பாதிக்கும் வகையிலே இங்கு வாழும் இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது.

பொருளாதார விருத்திக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதையும், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும்,  வட மாகாண மக்களின் உள்ளார்ந்த சுயகௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்;ட விரும்புகிறேன். ஏனெனில், இங்கு வாழும் பெரும்பான்மை இராணுவத்தினர் உள்ளூர் வாசிகளின் மொழியை பேசுவதில்லை. அத்துடன் மக்களின் மனம் தழுவியவர்களும் இல்லை. கலாசாரத்தில் ஊறியவர்களும் அல்ல. அவர்களின் ஊர்களை சேர்ந்தவர்களும் அல்ல. இங்கு இருக்கும் மக்களின் தொகைக்கு ஈடான தொகையில் இராணுவத்தினரின் தொகை இருக்கின்றது. நாட்டில் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், வடபகுதி மக்களின் நல உரித்துக்கள், பாதுகாப்பு, சுயகௌரவம் ஆகியவற்றை கருத்திற் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன்.  எமது எதிர்பார்ப்பிற்கு முரண்பட்டதாக அமைய வேண்டும் என்பதல்ல. இரண்டுமே பேணப்பட வேண்டும் என்பதை எனது மக்கள் சார்பாக உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன். போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பதற்கான கால வரையறை நிர்ணயிக்க வேண்டும். எமது மக்கள் உறுதியான மனம் உடையவர்கள். எச்சந்தர்ப்பத்திலும், மக்களின் தேவைகளை வழங்கி முன்னேற வழி வகுப்பது எமது எல்லோரினதும் கடமையாகும். சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும், இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த விடயங்களை ஆவண செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இந்த கோரிக்கையினை விடுத்தார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

_cancer_hospital_jaffna_openingஅங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,  ராஜபக்ச ‘எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.  ‘தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறைமுனை வரை நடை பயணத்தினை மேற்கொண்டு இன்று  இவ்வாறான வைத்தியசாலையினை நிர்மாணித்த இரு இளைஞர்களுக்கும் இந்த நாட்டின் கௌரவத்தினை சமர்ப்பிக்க விரும்புகின்றேன்’ என்றார்.  ‘கடந்த 30 வருட கொடூர காலத்தின்  பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையிட்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன். இதனைக் கருத்திற்கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு. வெளிநாட்டவர்கள் என்ன சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.  ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீதியரசர் என்ற வகையில் எங்களின் கௌரவத்தினைப் பெற்றுக்கொண்ட ஒருவர். அவர் இப்போது அரசியலுக்கு வந்து, எங்கே போனாலும் மேடைகளில் தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்து வைத்துள்ளார். அதற்கு சந்தோசப்படுகின்றதா? கவலைப்படுகின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நாட்டு மக்கள் சந்தோசமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். ‘போருக்கு பின்னர் வடபகுதியில் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்கின்றது, வடபகுதி மக்களின் கௌரவத்தினையும் இராணுவம் பாதிப்படையச் செய்கின்றது. இதனால் வடபகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் கூறவேண்டிய கடப்பாட்டில் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் முதலமைச்சர் இங்கு வந்தீர்களோ தெரியவில்லை. இந்த இடத்தில் பல இராணுவ முகாம்கள் இருந்தன. அத்துடன் வடக்கில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையான படை வீரர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது 10 முதல் 12 வரையான இராணுவ முகாம்கள் மாத்திரமே வடக்கில் இருக்கின்றன. அத்துடன், 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான இராணுவத்தினர் மட்டுமே இங்கு இருக்கின்றார்கள். தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இராணுவம் முழு நாட்டிலும் இருக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 18(136)‘இன்று காலை இங்கு வரும்பொழுது வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் ஒரு செய்தியினை பார்த்தேன். இராணுவம் பற்றிய விடயங்களை தெரிந்து கொண்டேன். நாங்கள் அனைவரும் மனிதர்கள். ஒரே விதமாகத்தான் பிறந்தோம். எல்லோரினதும் இரத்தம் சிவப்பு நிறம் தான். எங்களுக்கு கறுப்பு, நீலம், வெள்ளை, பச்சை என்று வித்தியாசமான நிறங்களில் இரத்தம் இல்லை. யுத்தத்தின் பின்னர் இங்கு இருந்த நிலைமை சற்று கடினமாக இருந்தது. அவற்றினை சீர்செய்வதற்கு 17 மாதங்கள் ஆகின. 3 இலட்சம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அத்துடன், பாதை, மீன்பிடி ஆகியவற்றில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், 14 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது. இவற்றினை மிக குறுகிய காலத்திற்குள் செய்ய முடித்தோம். ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், போன்ற தேர்தல்கள் நாடுபூராகவும் நடத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு ஜனநாயக உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்று நானும் அரசியல்வாதிதான்’ என்றார்.  ‘புற்றுநோயை குணப்படுத்துவதற்கு இனம், மதம் பார்ப்பதில்லை. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் ஒரே சமமானவர்கள். அனைவரும் அனைத்தினையும் பெற வேண்டும். 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்டு இந்த புற்றுநோய் வைத்தியசாலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வடமாகாண மக்கள் மட்டுமன்றி அனைவரும் நன்றாக பாதுகாக்க வேண்டும். அத்துடன் சுகாதாரத்திற்கு என 157 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5ஆவதாக யாழ்ப்பாணம் புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றது’ என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  ‘ஒருநாளும் தவறான வழிக்குப் போகாமல் வாழ வேண்டும். பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபை மூலம் நல்ல சேவையினை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும், உதவி செய்ய நான் ஆயத்தமாக இருக்கின்றேன். உங்கள் பிரதேசம் இன்னும் முன்னேற வேண்டும். நாங்கள்; ஒரு தாய் மக்கள். பொய் பிரச்சாரத்தினை நம்ப வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை பற்றி யோசிக்க வேண்டும். கோபம், குரோதமின்றி நன்றாக வாழ வேண்டும். அதுதான் தேவை. உங்கள் எல்லோரின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்’ என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா

13(452)நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் இன்றைய நிகழ்வானது யாழ். மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது வடமாகாண மக்களுக்கும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பயனுள்ளதாக அமையப் பெற்றுள்ளது. இவ்வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளானது நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அமையப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் புற்று நோய்க்கான உரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் இந்த வைத்தியசாலையினை உருவாக்கிய சிவகணநாதன் மற்றும் சரிந்த உனப்புவ ஆகிய இருவருக்கும் எமது மக்களின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இன்றுள்ள சூழலில் அரசியற் தீர்விற்கான களமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து விட்டுள்ளார். அதுவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும் . கடந்த காலங்களில் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது ஒர் அர்த்தபூர்வமானதாகும் என்பதுடன், இதன் கால எல்லை ஆறுமாதங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் பங்குபற்றாது இருக்கின்றமையானது பெரும் குறைபாடும் பின்னடைவுமாகும் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதில் விருப்பம் காட்டவும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் இணைந்து கொண்டு கருத்துக்களை முன்வைப்பதன் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை ஜனாதிபதி முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் யாவும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இன்று மாகாணசபை கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அரசின் பிரதிநிதியாக மட்டுமல்லாது மக்களின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். எனவே, கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

தேசிய கீதம்

newஇந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர். வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.