யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்-
இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்றையதினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாயபூர்வமாக இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் குடியரசு தின வாழ்த்து செய்தி உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இதேவேளை, உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது. மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 4ஆவது தடவையாக 2014 ஆண்டு இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் தகவல் திரட்டும் ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கை-நிமல்கா-
அரசாங்கம் நியமித்துள்ள காணாமற் போனோர் தகவல்களைத் திரட்டும் ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்பதை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என இனப்பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விளக்கமளித்துள்ளார். வட மாகாணசபை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் வடமாகாணசபை முறையாக இயங்க இடமளித்திருக்க வேண்டும். இவ்விடயம் குறித்தும் பேரவையில் பிரஸ்தாபிப்போம். காணாமல் போனோரின் தொடர்பான தகவல்களைத் திரட்டும் ஆணைக்குழு திரட்டும் தகவல்கள் பூரணமானதாக இருக்காது. யுத்தத்தில் ஒரு குடும்பம் முன்பதாக அழிந்திருந்தால் அல்லது வெளிநாடு சென்றிருந்தால் அது குறித்த தகவல்களை இந்த ஆணைக்குழு பதிவு செய்யாது. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்க முடியாது என நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நிமல்கா மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
மார்ச்சில் இலங்கைக்கெதிரான மூன்றாவது தீர்மானம்-
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக 3ஆவது தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளமை குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு எதிரான 3ஆவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன், தெரியப்படுத்தியுள்ளார். எனினும் நாம் ஜெனீவாவில் தோன்றவுள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த அறிவிப்பை அடுத்து இலங்கையரசு தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஆயர் கோரிக்கை-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை நாம் அதிகம் விரும்புகின்றோம் எனவே சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெற விரும்பினால் வழக்கறிஞர் ஊடாக சம்மதத்தை தெரிவிக்கவும் என மட்டக்களப்பில் வைத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் மட்டு ஆயர் யோசப் பொன்னையாவை சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தார். இதன்போது சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அல்லது புனர்வாழ்வளிக்க ஆவன செய்யுமாறு மட்டு. ஆயர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும்போதே பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஐ.நாவில் இலங்கை பாதுகாக்கப்படுமென தகவல்-
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இம்முறையும் இலங்கை அரசாங்கம் காப்பாற்றப்படலாம் என நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றவிசாரணையை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளபோதிலும், ஏனைய அங்கத்துவ நாடுகளுள் பெரும்பாலானவை இலங்கைக்ககு எதிராக சாதாரண பிரேரணை ஒன்றுக்கே தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை இந்தியாவினால் திருத்தப்படாதிருந்தால், அது நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தடவையும் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கையின் பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களில் காலதாமதமற்ற செயற்பாட்டினை கோரிய பிரேரணை ஒன்று மாத்திரமே முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமற்போனோர் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் உதவி
காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்கள் தொடர்பில் கிடைத்த 150 முறைப்பாடுகள்மீதான முதற்கட்ட விசாரணை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ கூறியுள்ளார். இதில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறைப்பாடுகளை சட்டமாஅதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக 150பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் 500க்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக அங்கு வருகைதந்ததால் பிரிதொரு நாளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரச உயர்மட்ட அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு விஜயம்-
மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இந்த குழுவில் குடியேற்ற அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் இந்த குழு பங்கேற்றுள்ளது கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மணலாறு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் வன்னிப் பிராந்தியந்திற்க்கு பொறுப்பான அதிகாரியும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, குறித்த பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகாரிகள் கேப்பாபிலவு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் நிறைவேற்றுவதில் பிரித்தானியா, அமெரிக்கா தீவிரம்-
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுத்துள்ளன. இந்த தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவினை திரட்டும் கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் செயலாளர் மார்ச் சிம்சன் தெரிவித்துள்ளார். அமைச்சு மட்டத்தில் ஆதரவு திரட்டும் பணிகளை பிரித்தானியா மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் செயலாளர் மர்ச் சிம்சன் மேலும் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு-
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் விவாதிப்பதற்காக தன்னால் அவசர பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்துள்ளார். மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சை மூலம் ஆட்திரட்டலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு மாவட்ட ரீதியாக இன விகிசார அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என இது தொடர்பான அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது தகுதிக்குரிய புள்ளிகளை பெற்றிருந்த தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இரா. துரைரெத்தினம் கூறியுள்ளார். போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின்படி 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த 273 தமிழர்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் 172 முஸ்லிம்களில் 115 பேரும் 184 சிங்களவர்களில் 40 பேரும் தெரிவாகி நியமனம் பெறவிருக்கின்றார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தகர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் கடுவெலயில் மீட்பு
கண்டி, பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவரை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளைநிற வேன் கடுவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் பேராதனை கொழும்பு வீதியில் நானுஓயா பாலத்திற்கருகில் நள்ளிரவுவேளை வீட்டிலிருந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை வெள்ளைநிற வேன் ஒன்றில் கடத்திச் சென்றனர். பின்னர் இவ்வர்த்தகர் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் கடுகண்ணாவ வீதியில் பாழடைந்த இடம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பேராதனை பொலிஸார் வர்த்தகரை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் கடுவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சாரதி மற்றும் சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.