வேட்புமனு தாக்கலுக்கு அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதி அவசியம்-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன், வேட்பாளர்களின் அடையாள அட்டை அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதியும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் சொத்துகள், பொறுப்புகள் தொடர்பிலான பிரகடனங்களின்போது தோன்றும் பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களின் பிரதிகள் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேரணையை வலுப்படுத்த நடவடிக்கை-
இலங்கை அரசுக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுசேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க் சைமண்ட்ஸ் நேற்றையதினம் நடைபெற்ற பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானிய வெளிவிவகார திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மார்க் சைமண்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறவருக்கு விசேடஅடையாள அட்டை-
இலங்கையில் குறவர் இன மக்களுள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வனவளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த இனத்தவர்களுடன் பேசி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மிருகங்களை காட்சிப்படுத்துவதுடன் சாத்திரம் பார்த்து பிழைப்பு நடத்தும் குறித்த மக்கள், நீண்ட காலத்துக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை-
எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களின்போது, வாக்கெண்ணும் பணிகளை மேலும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பொதுச் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த தேர்தல்களின்போது, அரசாங்க சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இம்முறை மீண்டும் வேட்பாளர்கள் அரச வாகனம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கும், அவர்களுக்கான பிரசார இடங்களை நிர்ணயிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.