வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறப்பு-
மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இரு மொழி உதவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், அமைச்சர் வாசுதேவ நாணயகாரவினால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கலாச்சாரம், பண்பாடு, மொழி அடையாளங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கை மற்றும் மொழிசார்ந்த ஒருமைப்பாட்டை அவசியம் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கோடு இந் நிலையம் திறந்துவைக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, வவுனியா மாவட்ட அரச அதிபர், ஜனாதிபதி செயலக வவுனியா இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்-
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது வன்னியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்ள நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இதனை மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, இந்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி-
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனந்தி மாகாண சபையில் முன்வைத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராகவுள்ள சகோதரி அனந்தி தகுதியானவர் என நினைக்கின்றேன்’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சபை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு அனுமதியளிப்பதாக சபை தவிசாளர் சி.வீ.கே. சிவஞானம் அறிவித்துள்ளார்.
பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை-இரா. சம்பந்தன்
சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் அத்தகையதொரு விசாரணையை நடத்தும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்று நிறைவுபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்-
மன்னர் திருகேதீஸ்வரம் பகுதியில் மனித புதைக்குழியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த மனித புதைக்குழியில் இதுவரை 14 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருகேதீஸ்வரம், மாந்தை வீதியினூடாக குடிநீர் வழங்குவதற்காக நீர் குழாய்கள் பதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 44 மண்டையோடுகள், எழும்புக்கூடுகள் உள்ளிட்ட எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு அனுமதி அட்டை இல்லை-
சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு அவர்களுக்கான வேட்பாளர் அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர் அனுமதி அட்டைகள் இன்றி அவர்களுக்கு வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாது. இந்நிலையில், வேட்பாளர்கள் தமது செத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு இந்த அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயலாளர்களுடனான சந்திப்பின்போது, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அனைவரும் தமது சொத்து விபரங்களை தேர்தல்கள் செயலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் மா அதிபரிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரிக்கை-
நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை பக்கச்சார்பின்றி எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரியுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி தேர்தல் நியாமானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு, பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் மாகாண சபை அமர்வில் கமலேந்திரன் பங்கேற்பு-
வடமாகாண சபையின் ஐந்தாவது அமர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் சபைக்கு அழைத்துவரப்பட்டார். வடமாகாண சபையின் ஜந்தாவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாணசபைக் கட்டடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த அமர்வுக்கு நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் சிறைக்காவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிசாரின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் சபைக்கு அழைத்துவரப்பட்டார். பின் சபை அமர்வில் கமல் கலந்துகொண்டார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனுக்கு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டர் ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம்-
வடமாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூலம் தொண்டர் ஆசிரியர்களை பகுதிநேர ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்றுகாலை 11மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாக தற்போது கடமையாற்றி வருபவர்களுக்கு கல்வித்தகைமை அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள், டிப்ளோமா கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, கல்விஅமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழப்புகள்-
மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலர் நீரில் மூழ்கியுள்ளனர். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் நேற்றையதினம் இவ்வாறு நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கல்கிஸ்ச கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். நாகொட மருத்துவமனையைச் சேர்ந்த 35வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். இந்நிலையில், தொம்பே கபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் நீழில் மூழ்கி பலியாகியுள்ளனர். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.