யுத்த வடுவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை-இமெல்டா சுகுமார்-
யுத்த வடுவால் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழிகாட்டல் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டல் சிகிச்சை முறையில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். மேலும், வடக்கு கிழக்கு மாவட்டச் செயலக அடிப்படையில் சமூக நல மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. நாள் தோறும் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று உருவாக்கப்பட உள்ளது. யுத்த கால உளவியல் பாதிப்புக்களுக்கு தீர்வு காணுவது தொடர்பில் தெளிவான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. விரைவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இமெல்டா சுகுமார் மேலும் கூறியுள்ளார்.
இலங்கைகெதிரான பிரேரணையை முன்வைப்பதில் அமெரிக்கா உறுதி-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா நேற்று மீண்டும் உறுதிப்படு;த்தியுள்ளது. எவ்வாறாயினும், மாநாட்டின்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பது பற்றி அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் பொறுப்புக்கூறும் செயற்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இதற்கு முன்னரும் மனிதவுரிமைகள் ஆணையகம் நிறைவேற்றிய யோசனைகளின் பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனையை கொண்டு வருவதற்கு இந்நிலைமை தாக்கம் செலுத்தியதாக ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் 5 வருட காலப்பகுதியில் மேம்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கமளிக்கும் விஜயமாக அமெரிக்க தரப்பினர் இதனைக் கருதுகின்றனர்.
கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு பேரவை அங்கீகாரம்-
பயங்கரவாத குழுக்களுக்கு நாடுகள் கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் பிரித்தானியாவினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பணயக் கைதிகளிடமிருந்து அல் கைதா இயக்கத்துடன் தொடர்புடைய குழுக்கள் 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான பிரித்தானிய தூதுவர் கூறியுள்ளார். இத்தீர்மானத்தில் புதிய சட்டரீதியான விடயங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
தபால் மூலம் வாக்களிப்போர் தகவல்களைப் பெற 1919 அறிமுகம்-
தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்கள் தமது பதிவு தொடர்பிலான தகவல்களை, அரச தகவல் கேந்திர நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் ஈடுபடும், தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பதிவு தொடர்பான தகவல்களை, 1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. நெருக்கடி நேரத்தில் இந்தத் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள சிரமம் ஏற்படுவதால், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலீஸ் மா அதிபருக்கு பவ்ரல் அமைப்பு மனு-
பவ்ரல் அமைப்பினால் எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில், காவல்துறை மா அதிபருக்கு நேற்று மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களுக்கு அமைய இந்தமுறை தேர்தலின்போது அவதானம் செலுத்தப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்து அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், அரசாங்க சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சிவப்பு இலக்கத் தகடு பதித்த வாகனங்களை பயன்படுத்துதல் போன்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் பிரசாங்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் பாதுகாப்பு பக்கச்சார்பின்றி சமநிலைமையாக அமையவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பிரசாரங்களுக்கான அனுமதிகளும் சமாந்தரமாக அமைய வேண்டும். தேர்தல் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்துக்கட்சி தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கும் போது கூடிய கவனம் செலுத்துமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் இலங்கை மாலுமிகள் இன்னல்-
நியுசிலாந்து – நோஃபுலொக் தீவுக்கு அருகில் அசாதாரண காலநிலை காரணமாக மீனவ படகொன்று சிக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசிலாந்தில இருந்து குயின்ஸ்லான்டின் கிலேட்ஸ்டோன் பகுதிக்கு குறித்த படகு பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் இலங்கையைச் சேர்ந்த பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மறுமுனைக்கு செல்வதற்கான வீசா அனுமதிப்பத்திரங்களை கொண்டிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ட்ரோலர் படகு ஏற்கனவே, பயண ஆரம்பத்தின்போது தாமத்ததாக கப்பல்துறை முகவர் ஜெஸ்மின் கெய்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலிருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றம்-
கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இடத்தில் உள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன நடமாட்டம் அற்ற பிரதேசமாக உருவாக்கி தருவதற்கும் இலங்கை அரசாங்கம் ரஸ்யாவுக்கு உறுதியளித்துள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், ரஸ்ய தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களின் பரம்பரையினர் பௌத்தலோக மாவத்தையில் சுமார் 100 வருடங்களாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விவகாரத்தில் இராஜதந்திரிகள் தலையீடு;-கோத்தபாய-
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையீடு செய்கின்றனர் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஹில்டன் விடுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையைத் தமது நிகழ்ச்சி நிரலின்கீழ் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி முயற்சிக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்கள் சுருக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்குத் தேவையான கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களில் மட்டுமே தற்போது வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ளனர். வடக்கில் சட்டம் ஒழுங்கை முழுமையாக பொலிஸாரே கவனித்துக் கொள்கின்றனர். இதற்கென வடக்கு, கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழ்பேசும் பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் இழக்கப்பட்ட வாய்ப்புகளை இலங்கை இப்போது மீளப்பெற்று வருகிறது. போருக்குப் பின்னர், குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிலர் அரசின் பெயரைக் கெடுக்க முனைகின்றனர். பிரச்சினைகளை நியாயமாகத் தீர்க்க விரும்பினால் அவர்கள், எமது பிரச்சினைகளை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லாமல் உள்நாட்டு செயல் முறைகளின் மூலம் தீர்ப்பதற்கு அரசுடன் கலந்துரையாட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன. வடக்கில் முழுமையான அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வீதியோரத்தில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு-
வவுனியா, மருக்காரம்பளையில் வீதி திருத்தப் பணியின்போது பழங்காலத்து நாணயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. தாண்டிக்குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராமத்தில் வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே சுமார் 120 பழங்காலத்து நாணயங்கள் மீட்கப்பட்டன. மண் பானையொன்றில் காணப்பட்ட இந் நாணயங்கள் எக்காலத்துக்குரியவை என்பதனை அறிவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர மேற்கொண்டுள்ளார். சுமார் இரண்டு அடி தாழ்ப்பத்தில் வீதியோரத்தில் காணப்பட்ட இந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டு காணப்பட்டதுடன் சோதமடையாத நிலையில் காணப்பட்டது. கனரக இயந்திரம் மூலம் கால்வாய் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் இந் நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த பானை உடைந்து காணப்பட்டதுடன் அதனுள் இருந்த நாணயங்களும் சிதறிக்காணப்பட்டது. இதேவேளை அங்கிருந்து அகற்றப்பட்ட மண் வேறோர் இடத்தில் கொட்டப்பட்டு வருவதனால் மேலதிக நாணயங்கள் மண்ணோடு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவ இடத்திற்கு வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயகுமார், கிராமசேவகர் எஸ். உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்படி பழங்காலத்து நாணயங்களை மீட்டு ஆய்வுக்காக பாதுகாப்பாக எடுத்துச்சென்றுள்ளனர்.
மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைவதற்கு வாய்ப்பு-
மரண தண்டனை பெற்றுள்ள கைதிகளுக்கு அதனை ஆயுள் சிறை தண்டனையாக குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆராயவென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் கமலநீ டி சில்வா தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்டி, போகம்பர சிறையில் மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் கூரை மீதேறி தமக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அது குறித்து ஆராயப்படும் என அதிகாரிகள் கைதிகளிடம் தெரிவித்ததை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்படி, தற்போது மரண தண்டனை பெற்றுள்ள கைதிகள் குறித்த தகவல் அடங்கிய அறிக்கை ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மரணதண்டனை கைதிகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. மரணதண்டனை பெற்றுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் தனித்தனியே ஆராயுமாறு நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், விசாரணை குழுவிற்கு பணித்துள்ளார். மரண தண்டனை பெற்ற 425 பேர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிச்சையடிக் கடலில் மூழ்கிய இருவரின் சடலங்கள் மீட்பு-
மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலங்களை சவுக்கடி கடற்கரையோரத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் நண்பர்கள் 07பேர் ஒன்றாக மேற்படி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, மூவர் கடல் அலையால் அள்ளுண்டு சென்றனர். ஏனைய நான்கு பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றையவரது சடலம் தேடப்பட்டு வருகின்றது.