வவுனியா மனநல காப்பாகப் பிரிவு நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு-
வவுனியாவின் முன்னைநாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல காப்பாக பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வைத்திய கலாநிதி சுதாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வவுனியா ஸ்டார் மீடியா பிரியந்தனின் ஒழுங்கமைப்பில் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பொருட்களை வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் வைத்திய கலாநிதி அகிலன் அவர்களிடம் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் ஆசிரியர், கோவில்குளம் இந்துகல்லூரியின் முன்னாள் அதிபர் சிவஞானம், கவிஞர் மாணிக்கம் ஜெகன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சதீஸ் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
உகண்டா பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-
உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் இன்றுகாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். யாழ். பலாலி விமான நிலையத்தை அடைந்த உகண்டா பாதுகாப்பு அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் யாழ்.கட்டளை அதிகாரியினாலும் வரவேற்பளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஒடாங்கோஜீயை உகண்டா நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலய தூதுவர் வி.கணநாதன் மற்றும் உகண்டா பிரதி பாதுகாப்பு அலுவலர் லெப்ரினன்ட் ஜெனரல் சாள்ஸ், அன்ஜினா லிவரோ நிறுவன மகாமைத்துவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜேம்ஸ் மேலினா மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதனையடுத்து உகண்டா பாதுகாப்பமைச்சர் அடங்கிய குழுவினர் நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், யாழ்.பொது நூலகத்தினையும், யாழ் கோட்டையையும் பார்வையிட்டுள்ளனர்.
கண்ணிவெடியில் சிக்கி ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்-
யாழ். பருத்தித்துறை நாகர்கோயில் பகுதியில் இன்றையதினம் காலை கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இத்தகவலை பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்ணிவெடியில் சிக்கியதால் 22 வயதான ஜே.சயந்தன் எனும் பணியாளரின் கைகள் இரண்டிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 38 இந்திய மீனவர்கள் கைது-
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 38 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 06 படகுகளில் வந்த 38 இந்திய மீனவர்களையும் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல், தென் மாகாணசபைத் தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவு-
கடைசியாக நடைபெற்ற தேர்தலுக்கு செலவான 874 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுமிடத்து மேல் மற்றும் தென் ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள 14.1 மில்லியன் வாக்காளர்களில் ஆறு மில்லியன் வாக்காளர்கள் இந்த இரண்டு மாகாணங்களில் உள்ளனர். இவ்வாறு பெருந்தொகை வாக்காளர்கள் காணப்படுகின்றமையே செலவு அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும் என தேர்தலகள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அடிப்படை செலவுகள், வாக்காளர் அட்டை மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளன. இது சாதாரணமாக வாக்காளர் ஒருவருக்கு 200 ரூபாவரை செலவாகும். இதுவே அடிப்படை மதிப்பீடாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு-
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னர் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கடைசி நாள் பெப்ரவரி 7ஆம் திகதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த மாகாணசபை தேர்தலில் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளையும் சில இடங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரத்தாலான வாக்குப் பெட்டிகள் செலவு கூடியவை. இதனால் மீள்சுழற்சிக்குள்ளான பிளாஸ்ரிக் கழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவோம். இது செலவு குறைந்தாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்களை நியமிக்க தடை-
2014 வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறை தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கவோ அல்லது இருப்பவர்களை நீக்கவோ கூடாது என உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 31ம் திகதிவரை இவ்வாறு மாற்றம் செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளுராட்சி சபை தலைவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. எனினும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட மாத்தறை, புளத்சிங்கள, கெஸ்பேவ ஆகிய பிரதேச சபைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தடையின்றி செயற்பட முடியும் என நீதிமன்றம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பிக்குகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்யத் தடை-
அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட சிஹல ராவய அமைப்பின் அனைத்து தேரர்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அண்மையில் பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்த அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது கொழும்பு நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணை முடியும்வரை சிஹல ராவய அமைப்பின் தேரர்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்ப நல சுகாதார அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு-
அரச குடும்ப நல சுகாதார அதிகாரிகள் இன்று காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தாதியர்களுக்கு மகப்பேற்று சிகிச்சை சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரச சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் ஏற்கனவே தாதியர்களுக்கான மகப்பேற்று பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புல்மோட்டை மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்-
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து திருகோணமலையின் புல்மோட்டை மீனவர்களால் முன்னெடுக்கபடும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கொக்கிளாய் களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற தமக்கு கட்டுவலையைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் திணைக்களம் தடை விதித்துள்ளதாக தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுவடுவதாக கூறி பலர் கடற்றொழில் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புல்மோட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும், கொக்கிளாய் களப்பில், ஏனைய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத முறையிலே மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், தமக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.