நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்றுபகல் இலங்கை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருந்து அரசியல் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரு தரப்பு விடயங்கள், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக் கூறும் விடயங்கள் தொடர்பில் அவர் இதன்போது கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் தமிழ அரசியல் பிரதிநிதிகளையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
காத்தான்குடியில் படகு கரையொதுங்கியது-
மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் இன்றுகாலை ஆளில்லாத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இந்த படகு மூங்கில்களால் செய்யப்பட்ட 27 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. இப்படகினை, காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் உட்பட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த படகு மியன்மார் நாட்டு படகாக இருக்கலாம் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சவுக்கடி கடலிலும் இவ்வாறான ஒரு படகு கரையொதுங்கியதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். குறித்த படகின் சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து காணப்படுகின்றதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீனவர் கைது பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயல்- தமிழக முதல்வர்-
இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையால் கடந்த 29-ம் திகதி கைதுசெய்யப்பட்ட 38 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் இலங்கைத் தூதரகம் திறக்க நடவடிக்கை-
இலங்கைக்கான புதிய துணைத் தூதரகம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பெப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் திருவனந்தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்துள்ளார்.
ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் ஐ.தே.க. சார்பில் கம்பஹாவில் போட்டி-
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன். எனது தந்தை டாக்டர் ஜயலத் வர்த்தன சகோதர இன மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். அதனை நான் தொடர்வேன். அத்துடன் அனைத்து இன மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் எலும்புகூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணி ஆரம்பம்-
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மனிதப் புதைகுழியை தோண்டும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 18 ஆவது நாளான நேற்று 5 மனித எலும்புக்கூடுகள் பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கத் தகடுகள் திருட்டு-
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுதியான இயந்திரத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன. நேற்று மதியம் ஆலயம் பூஜைக்காக திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்தது. நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு தங்கத் தகடுகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பல ஆலயங்களில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்கள் தொகை குறைப்பு-
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்களுக்காக, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உறுப்பினர்கள் தொகை குறைவடைந்து கம்பஹா களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர் தொகை அதிகரித்துள்ளது. இதனை தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மூன்று உறுப்புரிமைகள் குறைவடைந்துள்ளதுடன் அதில் இரண்டு உறுப்புரிமை களுத்துறைக்கும் ஒரு உறுப்புரிமை கம்பஹாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் 43 உறுப்பினர்களாக காணப்பட்ட அதேவேளை, இந்த முறை தேர்தலில் அது 40ஆக குறைவடைந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 20 உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றதுடன் அது தற்சமயம் 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் nரிவித்துள்ளது.
அகதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி-
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்கின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகளின் வருகை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியக் குழு ஒன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த குழு நியமிக்கப்பட்ட 100 நாட்களில், இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலப்பகுதியில் எந்த ஒரு இலங்கை அகதியும் அவஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களுக்கு உதவுவது போல் சுஷ்மா நாடகம்-சுதர்சன நாச்சியப்பன்-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை பாரதீய ஜனதா கட்சி இன்று இராமேசுவரத்தில் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். இந்த போராட்டம் பற்றி இன்று சென்னை சென்ற இந்திய மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றி சுஷ்மா சுவராஜுக்கு நன்றாகவே தெரியும். அவர் இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்தவர். அந்த அளவுக்கு இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். இப்போது தமிழக மீனவர்களுக்கு உதவுவது போல் தேர்தலுக்காக அவர் ஆடும் நாடகம்தான் இந்த போராட்டம். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். துறைமுக பகுதிகள் தவிர இதர பகுதிகளில் மீன்பிடிக்க ஒப்பந்தம் பேசி இருக்கிறார்கள். அதுவரை இருநாட்டு அமைச்சர்களோ, அதிகாரிகளோ இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும். ஆனால் அதை உடைக்க சிலர் முயலுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் இழப்புகள் கணக்கிடப்பட வேண்டும் – ஹஸன் அலி-
இலங்கையில் போர்க் காலத்தில் முஸ்லிம்கள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அப்படியான கணக்கெடுப்பை அரசே விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். தமது தரப்பில் பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லையென்றும், அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமது கோரிக்கை தமிழ் மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இருக்கும் என்றும், தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு முரணானது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், வாழ்வாதார பாதிப்புகள் போன்ற விஷயங்கள் எங்குமே பதியப்பட்டதாகத் தெரியவில்லை இலங்கையில் சிங்களவர் மற்றும் தமிழ் தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தே உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பேசப்பட்டு வருவது, பாதிக்கப்பட்ட இன்னொரு தரப்பான முஸ்லிம்களுக்கு மிகவும் வேதனையை அளித்துள்ளது என்று ஹஸன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.