மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தோம்-இரா.சம்பந்தன்-

sampanthan_bஅரசாங்கத்தின் செயற்பாடுகள், இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வாலை நேற்றுச் சந்தித்து கலந்துரையாடியபோது தமது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதி தம்முடன் பேச்சு நடத்தியதாக இரா.சம்பந்தன்; மேலும் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகள் செய்யப்பட்ட பின்னர், மனித உரிமைகள் பேரவையில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பின்னர் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நிஷா பிஸ்வால் கேட்டறிந்துகொண்டதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஆயர் – நிஷா தேசாய் சந்திப்பு-

fdfdfdfnisha nallur ...யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள அமெரிக்க தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியள்ளார். இந்த சந்திப்பு இன்றுகாலை 9 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே.சிசனும் இக்கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்தார். இதேவேளை, நிஷா தேசாய் பிஸ்வால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்றுகாலை விஜயம்செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். அவர் யாழ்.சிவில் அமைப்பினர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிஷா பிஸ்வால், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் நீதித்துறை அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளின் பிரச்சினை குறித்து ஆராய்வு-

indian housing scemeஇலங்கையில் இந்தியா கட்டிவரும் 50 ஆயிரம் வீடுகள் குறித்து இன்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில் பேசிய இந்தியத் துணைத் தூதர் எஸ்.மகாலிங்கம் இந்த திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போருக்குப் பிறகான இலங்கையில், இந்திய உதவியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களை, குறிப்பாக வடக்கில் நடைமுறைப்படுத்தப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை, இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறையின் விசேட செயலர் சுஜாதா மேத்தா, இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிக செயலரும், நிதித்துறை ஆலோசகருமாகிய வினய்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடபகுதியில் இரண்டு தினங்கள் பார்வையிட்டதன் பின்னர், நேற்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்திய வீட்டுத் திட்டத்தைச் செயற்படுத்துகின்ற நிறைவேற்று நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடனான இச் சந்திப்பில் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், தடைகள் குறித்தெல்லாம் விரிவாக பேசப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்வதில் வவுனியா மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டிருப்பதாகவும் மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

புல்மோட்டை மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது-

திருமலை புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கொக்கிளாய் களப்பு பகுதியில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமைக்கு கடற்றொழில் திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தமது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர். எனினும் புல்மோட்டை மீனவர்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமையால் அவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் தயாசிறி நரேந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான மாற்று நடவடிக்கையை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான அனைத்து உதவிகளும் கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொக்கிளாய் களப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றமைக்கு கடற்றொழில் அமைச்சிலிருந்து அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபை தேர்தல்; 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு, இதுவரை 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. 10 சுயேட்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி 5ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைவதுடன், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் பூர்த்தியடையவுள்ளன. கடந்த 2 நாட்களுக்குள் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 15 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கொழும்பு மாவட்டத்திற்காக 8 சுயேட்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்திற்காக 3 சுயேட்சைக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்திற்காக 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. தென் மாகாணத்தில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்காக 5 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. காலி மாவட்டத்தில் 2 சுயேட்சைக் குழுக்களும், மாத்தறை மாவட்டத்தில் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்தவொரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்பதுடன், மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அங்கீகாரம் இன்றி வெளிநாட்டில் தொழில்புரிவோர்க்கு உதவி இல்லை-

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் அங்கீகாரம் இன்றி சுயமாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளில் மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று அந்த பணிமனை தெரிவித்துள்ளது. அதன் முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து பலர் சுற்றுலா மற்றும் கல்வி வீசாவில் சென்று வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்களின் தொழில் உரிமைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை பொறுப்பு கூறாது. மனிதாபிமான அடிப்படையிலேனும் அவர்களுக்கான மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதில் திருப்பம்-

ஆட்கடத்தல் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமையானது, இந்த சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் பாரிய திருப்பம் என, பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய குடிவரவுத்துறை திணைக்களத்தின் தலைவர் டேவிட் பெயாக்லோவ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து கப்பல் ஊடாக பிரித்தானியாவுக்கு அகதிகளை கடத்தி வந்து, பிரித்தானியாவிலும், ஏனைய நாடுகளிலும் சட்டவிரோதமாக குடியேற்றுவதற்கு உதவியதாக கூறப்பட்ட நான்கு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் சீராக திட்டமிட்டு இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களை கைது செய்துள்ளமையானது, ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்-இந்தியா-

india sri lankaதமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அமெரிக்கா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கவுள்ள பிரேரணை எதிர்க்க முடியாது என இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாக த எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கடந்த புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்த போது, அமெரிக்காவின் இந்த பிரேரணையை சமர்ப்பிக்கும்போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுமாறு கோரி இருந்தார். எனினும் இந்த கோரிக்கையை அமைச்சர் சல்மான் குர்சித் நிராகரித்தாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேலும் இரு பொலிஸ் நிலையங்கள் திறப்பு-

பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன், புத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் தொடர்பான பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் நேற்று முற்பகல் கிழக்கு மாகாணத்தில் புதிய பொலிஸ் நிலையங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவை சூழவுள்ள அக்போபுர மற்றும் சூரியபுர ஆகிய பொலிஸ் நிலையங்களே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.