மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது-

mel gunasekaraசுதந்திர ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியைச் சேர்ந்த 39வயதான பெயின்டரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் வீட்டில் குறித்த சந்தேகநபர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் நேற்று கொள்ளையிட வந்தபோது, சந்தேகநபரை மெல் குணசேகர அடையாளம் கண்டுகொண்டதால், அவரை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்துள்ளமை, முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கைதான சந்தேகநபரிடமிருந்து, மெல் குணசேகரவின் செல்போன் மீட்கப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரை கைதுசெய்ய முடிந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்; 42 முறைப்பாடுகள் பதிவு-

unnamed3மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் தொடர்பில் 42 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன. தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் பிரிவு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்திய 3 சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்திய 8 சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.

விமானத்தில் குண்டு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர் கைது-

untitledதன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியவாறு சுவீடன் சென்று கொண்டிருந்த விமானத்தின் விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற இலங்கையர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஸ்ரொக்கோமிலுள்ள ‘ஆலண்ட’ விமான நிலையத்திலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஞாயிறு பகல் டுபாயிலிருந்து ஆலண்ட விமான நிலையம் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இந்தப் பயணி தன்னிடம் குண்டு இருப்பதாக சத்தமிட்டபடி விமானிகள் அறைக்குள் பாய முயற்சித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த சமயமே பயணிகள் பகுதியில் இருந்து விமானிகள் அறைக்குள் பாய முயற்சித்துள்ளார். இவரை விமானப்பணியாளர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். வயர்களால் கைகள் கட்டப்பட்டு இவர் விமானத்தின் தரையில் கிடத்தப்பட்ட நிலையில் விமானம் மீகுதிப் பயணத்தை தொடர்ந்து முற்பகல் 11.00 மணிக்கு ஆலண்ட விமானநிலையத்தை சென்றடைந்தது. இவர் விமான நாசவேலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் கைது-

திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவரின்மீது தாக்குதல் நடத்தி, அவருடைய பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினர் தீ மூட்டி தற்கொலை-

imagesCAJSGE78கேகாலை, எட்டியாந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் உபுல் சிசிரகுமார என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புலத்கொஹூபிடிய, இஹலபெலெம்பிடிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவராவார். தீயினால் படுகாயமடைந்த பிரதேசசபை உறுப்பினர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-

4நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இந்த முறைப்பாடுகளை ஏற்பதற்காக கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை 24 மணித்தியாலங்களும், 1996 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாடுகளை அறிவிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 24 மணித்தியாலங்களும் தமது அதிகாரிகள் தயாராகயிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அகதி சிறார்கள் குறித்து விசாரணை-

ausஅகதி அந்தஸ்து கோரும் சிறார்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவுஸ்திரேலிய மனிதவுரிமைகள் ஆணையகம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சிறார்களின் நலன், சுகாதாரம் மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஆணையகத்தின் தலைவர் கில்லியன் ரிக்ஸ் தெரிவித்துள்ளார். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் தற்போது அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் உள்ளதாக மனிதவுரிமைகள் ஆணையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்;றன. அவர்களின் 100க்கும் அதிகமானவர்கள் நவுருதீவில் கரையொர மையங்களில் உள்ளதுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தடுப்பு முகாம்களின் உள்ள சிறார்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதுடன், பலர் தமது அன்றாட வாழ்க்கை மேம்பாடுகளை அடைய முடியாத நிலையில் உள்ளனர். மிகவும் நெருக்கடியான சுற்றாடலில் சிறார்கள் வாழ்ந்து வருகின்றனர் என அவுஸ்திரேலிய மனிதவுரிமைகள் ஆணையகம் தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சகல பரீட்சை பெறுபேறுகளும் இணையத்தில் வெளியிடப்படுமென அறிவிப்பு-

untitled4பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகளின் பெறுபேறுகளையும் 5 ஆம் திகதி முதல் இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுகொள்ள முடியும் என இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் பி.டப்ளியு ஏபாசிங்க தெரிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தினால் வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. எனினும், இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசியின் ஊடாக கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தர, உயர்தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலுவில் கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் முகத்துவாரக் கடலில் நீராடுவதற்காகச் சென்றபோது, கடல் அலையால் அள்ளுண்டு காணாமல் போன மருதமுனையைச் சேர்ந்த முஸ்தபா முகம்மது றிகாஸ்; (வயது 24) என்பவர் இன்று காலை பாலமுனை கடற்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடல் அலையை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள பாறாங் கற்களுக்கு மேலாக நீராடுவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்த 03பேர் நேற்றுமுன்தினம் கடல் அலையால் அள்ளுண்டனர். இந்நிலையில், கே.ரிபாத் (வயது 19), எச்.எம்.ருஸைக் (வயது 17) ஆகிய இருவரை காப்பாற்றி மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், மற்றையவரை மீனவர்களினால் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் இவரைத் தேடும் பணிகளை கடந்த 02 நாட்களாக மீனவர்களும் கடற்படையினரும் முன்னெடுத்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.