இலங்கையின் 66ஆவது சுதந்திர தினம்-
இலங்கையின் 66 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வுகள் கேகாலை நகரின் சுதந்திர மாவத்தையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றுகாலை ஆரம்பமாகி நடைபெற்றது. இதைவிட இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினம் நாடளாவிய ரீதியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதன் பின்னர், சுதந்திர தின கொண்டாட்டங்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. அதன்பின்னர் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் என்பன இசைக்கப்பட்டன. பின்னர் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், முப்படையினரின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.
இதன்போது ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதியாகும் என்று தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடுகளே. நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
அன்று தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்தமை உட்பட புலிகளால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எவரும் பேசவில்லை. வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை மீண்டும் கேடயமாக்க சில மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன. இதனை வடபகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை காப்பாற்றுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் என்றுதான் நாடுகள் மீது அவர்கள் கை வைப்பார்கள். தமிழ் மக்களுக்கு நாம் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது வேறு நாட்டிற்கு அடிமையாகவோ அல்லது கேடயங்களாக வாழ்வதற்கோ அல்ல என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
1233 கைதிகள் வெலிக்கடையில் வைத்து விடுதலை-
66 சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை பொரளை, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 1233 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1194 ஆண்களும் 39 பெண்களும் அடங்குகின்றனர். நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்தே இந்த கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் கே.பீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
நிஷா- பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான இராஜங்க அமைச்சர் ஹியூகோ சுவையரை லண்டனில் நேற்று சந்தித்து இலங்கை மனித உரிமை நிலைவரம் பற்றி பேசியுள்ளார்.
இலங்கையில் பல முக்கியஸ்தர்களுடன் பேசிய அவர் இலங்கையிலிருந்து புறப்படமுன்னர் ஊடகங்களை சந்தித்தபோது, இலங்கையில் நிலைமை திருப்தியில்லாத போதும் பொருளாதார தடைபற்றி அமெரிக்கா சிந்திக்கவில்லையெனவும் ஆயினும் இலங்கைக்கு எதிராக 3 ஆவது பிரேரணை கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.ஆயினும் சர்வதேச சமூகம் அதன் பொறுமையை இழந்துவருகின்றது என அவர் கூறியுள்ளார்.
யாழில் 9 கைதிகள் விடுதலை-
யாழ் சிறையில் இருக்கின்ற கைதிகளில் பெண் கைதியொருவர் உட்பட 9 கைதிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய 66 ஆவது சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம்.பெரேரா தெரிவித்துள்ளர். சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலிருந்த கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் மெல் கொலை தொடர்பில் பெயின்டருக்கு விளக்கமறியல்-
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச் சேர்ந்த சந்தேகநபரான ஜோசப் அன்டனி(வயது 29) என்னும் பெயின்டரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை பதில் நீதவான் கந்துருவானகே ஞானஸ்ரீ இன்று உத்தரவிட்டுள்ளார். வீட்டை உடைத்தல், களவெடுத்தல் மற்றும் படுகொலை ஆகிய குற்றங்களுக்கு கீழ் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 30 பேர் கைது-
யாழ். தீவுப்பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை இரவு கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் தற்போது யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறிருக்க, காங்கேசன்துறை கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் ள்நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஜகதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்து காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோதே கைதுசெய்யப்பட்டனர்.
மீனவர் விவகாரம், பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன 57 தமிழக மீனவர்களையும், அவர்களது 11 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜனவரி 1ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களும், ஜனவரி 29 ஆம் திகதி 38 மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே கைது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இலங்கைகடற்படையினர், பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்யும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பிரதமர் மன்மோகன் சிங், விரைந்து நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை அவர்கள் அமைதியாக நடத்த வழி காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிரால், மைத்திரிக்கு ஐதேகவில் இடமில்லை: நதீஷாவுக்கு இடமுண்டு-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மேல் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர்களான ஷிரால் லக்திலக மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய வேட்புமனு குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நடிகை நதீஷா ஹேமமாலிக்கு வேட்பு மனு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது-
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபரொருவர் புத்தளம் வனாத்தவில்லு காட்டுப்புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 17 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை குறைக்க கூடாது:மத்திய அரசு-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணை மனு மீதான முடிவை உடனே எடுக்காமல் 11 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருந்ததால் முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதேவேளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மறுசீராய்வு மனு மீதான விசாரணையை நடத்தி வருகிறது. கடந்த 29-ஆம் திகதி முதல் கட்ட விசாரணை நடந்தது. முதலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். பிறகு 4-ஆம் திகதி மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று மத்திய அரசு வக்கீல் வாகனவாதி ஆஜராகி வாதாடினார். அபோது அவர் கூறியதாவது:-ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த தாமதத்துக்கு காரணம் உள்ளது. அதை விளக்க முடியாது. ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. கொலை குற்றவாளிகளின் கருணை மனு நிலுவையில் உள்ள காலத்தில் செய்யப்படும் சித்திரவதை, அனுதாபத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது. வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கும், ராஜீவ் கொலையாளிகள் கேட்கும் சலுகைக்கும் வித்தியாசம் உள்ளது. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரும் ராஜீவ் கொலையாளிகளின் மறு சீராய்வு மனு தகுதியானது அல்ல. எனவே அந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேர் சார்பில் வக்கீல் நிகில் சவுத்திரி ஆஜராகி வாதாடினார். அவர் 3 பேரின் கருணை மனு 11 ஆண்டுகள் தாமதம் செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் 3 பேரும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டனர். எனவே 3 பேர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட மீனவ பேச்சுவார்தை-
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார் ஏற்கனவே தமிழகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளன தமிழக மீனவர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தாமல் இருத்தல் மற்றும் இழுவைப்படகுகளை பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 30 நாட்களுக்கு நடைமுறைக்கு வரவுள்ளன இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இதேவேளை, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 30 இந்திய மீனவர்கள் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.