இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைக்கேடு: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-
இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இன்று மீண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று தமது மகஜரினை வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலனிடம் கையளித்திருந்தனர். 50 இற்கும் உட்பட்டவர்களே கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் ´வவுனியாவில் வசிப்பிடம் நெடுங்கேணியில் கழிவறையா, அதிகாரிகளே வீட்டுத்திட்டத்தை சீராக வழங்குங்கள், வீட்டுத்திட்டத்தில் நெடுங்கேணி வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்´ என தெரிவித்து கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பிரதேச செயலாளர் அவர்களுடைய கோரிக்கைகளை செவிமெடுத்ததுடன் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அகன்று சென்றனர். சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன் மற்றும் ம.தியாகராசா ஆகியோர் பிரதேச செயலாளர் க. பரந்தாமனுடன் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட முறைகள் அதனை வழங்குவதற்குள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
மனிதவுரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு-
அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் மனிதவுரிமை மீறல் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சிட்னி மோர்னிங் ஹெரல்ட் நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் யுத்த சூனிய வலயத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை இதற்கு காரணம் என்றும் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். எனினும், புலிகள் இயக்கத்திற்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் சவால்களுக்கு ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு தொடர்ச்சியாக இருக்கும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் சர்ஜி செலெசன்ஜென் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியை சந்தித்து பேசிய போதே சர்ஜி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சில நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு எந்த தருணத்திலும் சரியானதாக இருப்பதில்லை என்றும், யுத்தத்தின் பின்னர் புனரமைப்பு நடவடிக்கைகள் இலங்கைக்கே உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்கு கிடைக்க வேண்டும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை அற்ற கருத்துக்கள் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தமது இலங்கை விஜயத்தின் போது வெளியிட்டிருந்த கருத்துக்கள் போதிய ஆய்வுகள் இன்றி வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாத்திரம் ஆறு பாடங்களை சித்திப் பெற்றவர்கள் போலியான ஆவனங்களுடன் மருத்துவப் பட்டத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பதிவினை வழங்க கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்க, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் குறித்து, நீசா பீஸ்வால் போதிய விளக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த நிலையில் இலங்கை மீது ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருப்பதாகவும், இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகமை அற்ற வைத்தியர்கள்? –
போதிய கல்வித் தகமை இல்லாதவர்களுக்கு வைத்திய பதிவினை வழங்க முற்பட்டால், வைத்திய சபையின் அங்கத்துவம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தாதியர்களுக்கு மகப்பேற்று பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த குழுவுக்கு, இலங்கை தாதியர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த குழு தாதியர்களுக்கான மகப்பேற்று பயிற்சிகளை முற்றாக நிறுத்த முற்படுமாக இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை பெறுவதற்கான பிரிவு –
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர உள்ளிட்ட பரீட்சை பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலயங்களில் பெற்றுக் கொள்வதற்கான சேவைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இந்த சேவைகள் பரீட்சைகள் திணைக்களத்திலே வழங்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 1992 ஆம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெற்ற பரீட்சைகளின் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் போக்கு வரவேற்கதக்கது-
இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் இந்தியாவின் கடுமையான நிலைபாடு வரவேற்கத்தக்கது. எனினும் இந்த விடயத்தில் இந்தியா இன்னும் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டி இதனைத் தெரிவித்துள்ளார். சாலில் செட்டி அண்மையில் பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவை கடந்த 3ம் திகதி சந்தித்து, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.இது தொடர்பில் த டைம்ஸ் ஒப் இந்தியாவிடம் நேற்றைய தினம் செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இந்த செவ்வியில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பிலும், பொதுநலவாய நாடுளின் மாநாடு இடம்பெற்ற காலப்பகுதியிலேயே ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் பொதுநலவாய நாடுகள் ஏன் மௌனம் காத்து வருகிறது என்று கமலேஸ் சர்மாவிடம் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை சம்பந்தமாக இந்தியா தற்போது கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அமெரிக்காவின் பிரேரணைகளுக்கு ஆதரவளித்தமை, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணித்தமை போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கன. ஆனால் இந்தியாவால் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயம் அநேகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறைப்பாடுகள் 49-
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கொழும்பு மாவட்டத்தில் 13 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 07 முறைப்பாடுகளும், மாத்தறையில் 03 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டையில் 07 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை மேல் மாகாணத்தில் 13 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
ஐ.நா உதவி செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்-
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுவின் ஆசிய பசுபிக் தலைவருமான ஹாவோ சூ, எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார். இவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலர்களையும் அபிவிருத்தி பங்காளர்களையும் சிவில் சமூகத்தினரையும் சந்திப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மனிதாபிமானத் திட்டம் என்ற நிலையிலிருந்து அபிவிருத்தியை நோக்கிய திட்டமென்ற நிலைக்கு மாறும் நிலையில் ஐ.நா அபிவிருத்தித் திட்ட உதவிகள் பயன்படுத்தப்பட்டு எவ்வாறு ஐ.நா முறைமை முன்னேறக் கண்டது என்பதைப் பற்றி அவர் விளங்கிக்கொள்வார். இவர் புகழ்பெற்ற பொருளியலாளர்களுடனும் இலங்கை அபிவிருத்தி தொடர்பான விற்பன்னர்களின் பிரதிநிதிகளையும் பெண்கள் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார். வடக்குக்கும் விஜயம் செய்யவுள்ள இவர், அங்கு அரசாங்க அதிகாரிகளையும் சமுதாய தள நிறுவள பிரதிநிதிகளையும் அவற்றின் பயனாளிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார். இதன்மூலம் அவர் மாவட்டங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளையும் உதவி தேவைகளையும் விளங்கிக்கொள்வார். மேலும், அங்கு நடைபெறும் ஐ.நா மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.