பதாகைகள் ஏந்தி, பாராளுமன்றில் எதிர்ப்பு நடவடிக்கை- ஐ. தே. க.

2727_1_thumb_parliamentமின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே. க.வினர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் நேற்றுப் பிற்பகல்  கூடியது.
வழக்கம் போன்று வாய் மூல வினாவுக்கான விடைகள் வழங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கவினால் மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் உட்பட ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவர இருந்தது.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்குமாறு சபைக்கு தலைமை வகித்துக்கொண்டிருந்த பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.
பிரேரணையை கொண்டுவர இருந்த ரவி கருணாநாயக்க உட்பட எதிர்க் கட்சியின் எம்.பிக்கள் சபையில் வீற்றிருந்தனர். பிரதி சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து ரவி கருணாநாயக்க ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைப்பதற்கு பதிலாக பால் மா அதிகரிப்பு தொடர்பிலான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் எதிர்க் கட்சியினர் சகலரும் எழுந்து நின்றதுடன் சிலர் சபைக்கு நடுவில்வர முற்பட்டனர். இதனையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்ததை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பதாகைகளுடன் சபையின் நடுவிற்கு வந்த ஐ. தே. க. எம்.பிக்கள் சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் சென்று பதாகைகளை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.