ஆளும் கட்சியின் வேட்பாளர் பிணையில் விடுதலை-

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அஜித் பிரசன்னஹேவா தொடங்கொடவத்த உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலியிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டிருந்த வேட்பாளர் உட்பட இருவரும் பொலிஸாரால் வளஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக தேர்தல் பேரணி நடத்தியமை, சட்டவிரோத கூட்டமொன்றுக்கு உறுப்பினராகியமை, பொலிஸ் அதிகாரியொருவரைத் தாக்கி அழுத்தம் பிரயோகித்தமை, இராணுவ சீருடையை அணுமதியின்றி அணிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம-;

புதிய விவசாய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பண்டுக்க வீரசிங்க கூறியுள்ளார். விவசாய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ள விவசாயிகளின் வயதின் அதிகரிப்பிற்கு அமைய கொடுப்பனவு அதிகரிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விவசாய ஓய்வூதி திட்டத்திற்கு பயனாளிகளை இணைத்திற்கொள்ளும் நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்கு கமநல காப்புறுதி சபை உத்தேசித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பு திருத்தம்-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யாப்பில் காலத்துக்கு ஏற்றவகையில் சில சரத்துக்கள் திருத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நேரடியான நடவடிக்கை எடுக்கவும், தேசிய ரீதியாக விசாரணைகளை நடத்தவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் வகையில் அதன் யாப்பு சீர்த்திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இதற்கான பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை கைதுசெய்வதை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை-

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கையிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணயசாமி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இலகுப்படுத்தும் வகையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் 80 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநகரில் குண்டு மீட்பு- 

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறைப் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் தெரிவித்துள்ளனர். அதன்படி கைக்குண்டு ஒன்று குருநகர் இறங்குதுறைப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் மேற்படி குண்டினை மீட்டுச் சென்றுள்ளதுடன் அதனை செயலிழக்கவும் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.