கோவில் வீதியை பள்ளிவாசல் வீதியாக மாற்ற முயற்சி-

pallivasal veethiyaaka matra muyatchiஅம்பாறை மாவட்டம் கல்முனை தரவை பிள்ளையார் கோயில் வீதியின் பெயரை மாற்றுவதற்கு மாநகர சபை நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிவித்து, கல்முனையில் இன்று அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பெயரை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக பெயர்மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இந்த வீதியின் பெயர் மாற்றப்பட்டால், தரவைப் பிள்ளையார் கோவில் வீதியின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மதத் தலைவர்களும் அதிருப்தி வெளியிடுகின்றனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவர்கள் கல்முனை மாநகர சபை முதல்வர் நிசாம் காரியப்பர், கல்முனை தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரிடம் மகஜர்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இரு அதிவேக நெடுஞ்சாலைகள் மார்ச்சில் திறக்க ஏற்பாடு-

வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலையும் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் மார்ச் 8ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலை மார்ச் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விருப்பு இலக்கங்கள் நாளை விநியோகம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாகாண சபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய வேட்பாளர்களின் பெயர் முதலெழுத்துக்கள் அடிப்படையில் சிங்கள அகரவரிசை ஒழுங்கில் தேர்தல்கள் அலுவலகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் விருப்பு இலக்கங்கள் தற்போது சிரேஷ்ட அதிகாரிகளின் பரிசீலனைக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.; இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்காக தேர்தல் மூலம் 155 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 40 பிரதிநிதிகளும், களுத்துறை மாவட்டத்தில் 22 பிரதிநிதகளும் தெரிவாகவுள்ளனர். காலி மாவட்டத்தில் 22 பிரதிநிதிகளும், மாத்தறை மாவட்டத்தில் 17 பிரதிநிதிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 பிரதிநிதிகளும் தென் மாகாண சபைக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியின் மேலும் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு-

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டிபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் திகதி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 19 நாட்கள் இந்த புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 54 மண்டையோடுகள் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றில் 28 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. ஒன்பது நாட்களுக்கு பின்னர் இன்று 20 ஆவது தடவையாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறுவர் போராளியாக இருந்தவருக்கு 14 வருடங்களுக்கு பின் மரணதண்டனை-

புலிகளின் சிறுவர் போராளியாக இருந்தபோது கொலை குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு 14 வருடங்களுக்கு பின் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு கிண்ணியாவிற்கு அருகிலுள்ள உப்பூர் எனும் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை புலிகளுடன் சேர்த்து கொலைசெய்த குற்றச்சாட்டில் 14 வயதாக இருந்தபோது மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். ஆலங்கேணியை சேர்ந்த தங்கராஜா சிவகந்தராஜா எனும் புலிகளின் சிறுவர் போராளியான இவர் 1990ஆம் ஆண்டு சீனகுடாவில் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டிருந்த விசேட நீதிமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போதிலும் போதிய சாட்சியங்கள் இன்மையால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 3 வருடங்களின் முன்பு மேற்படி வழக்கு மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் சந்தேக நபரின் சார்பாக ஆஜராகினார். அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எல்.சாலி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி சந்தேகநபருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரணராஜா மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குறித்த சந்தேகநபர் பிணையில் சென்றிருந்த காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் மீள வலியுறுத்து- 

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் மீளவும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வெளிவிவகார பொதுநலவாயத்துறை அமைசர் ஸுவைவர்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அங்கு நடந்தேறிய போர்க் குற்றம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தி உள்ளார். இதையே பிரிட்டன் முழுமையாக விரும்புகின்றது. இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய செயல்பாடாக சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது. பிரதமர் டேவிட் கமரூன் முன்னரே குறிப்பிட்டதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வெளிப்படையான விசாரணை தொடங்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்த பிரிட்டன் முயற்சி எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறியுள்ளார்.