ஏ-9 வீதி விபத்தில் 5பேர் மரணம் 6பேர் படுகாயம்
ஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைற்கல் பகுதியில் வானொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதி இன்றுக்காலை விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஐவர் பலியானதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விபத்தில் சசிதரன் பதுமன் (05), சசிதரன் யர்மிதா (07), சோதிலிங்கம் மிதீபன் (35), சின்னத்துரை பரமேஸ்வரி (75), சின்னத்துரை சிவனேஸ்வரன் (49) என்பவர்களே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், சசிதரன் சர்மிளா (30) சிவனேசன் செந்தூரி (12), சிவனேசன் கபினா (08), சிவனேசன் தர்மினா (31), ஜெயக்குமார் தயாநிதி (53), சோதிலிங்கம் சஜீவன் (38) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதிலிங்கம் சஜீவனை தவிர ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
‘மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு பாடசாலை சகல மாகாணங்களிலும் -பந்துல குணவர்த்தன
நெனச செயற்த்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை, உவர்மலை விவேகானந்த கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றும்போது மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளும் சிறப்பு பாடசாலை இந்த வருடத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கவுள்ளதாக அவர் தெரித்தார். இது போன்ற பாடசாலையொன்று ஏற்கனவே ஹோமாகம பிரதேசத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். அத்துடன் திருகோணமலை பிரதேசத்தில் கல்விக் கல்லூரி ஒன்று இல்லை என்ற குறை மிக நீண்ட காலமாக உள்ளது. இந்த ஆண்டில் கல்விக் கல்லூரியொன்றை இங்கு ஆரம்பித்து வைக்கவுள்ளோம்’ என்றார். இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள 121 பாடசாலைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அநுசரணையில் 65,000 ரூபா பெறுமதியுடைய 32 அங்குல எல்ஈ.டீ தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர்களான எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
விபத்தில் தாயும், மகளும் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை (11-02-14) இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந் சாதனா என்ற தாயும் 03 வயதான ஆனந் யதுசிகா என்ற அவரது மகளும் மரணமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்டபோது, எதிரே வந்த கன்டர் ரக வாகனம் மோதி விபத்து சம்பவித்ததாகவும் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைதுசெய்ததாகவும். இவர்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
யாழில் ஐ.நா.வின் பிரதிநிதி ஹாலியாங் சூவ் வடக்கு ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார்.
இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
மூன்றாம் தரப்பின் உதவி இல்லாமல் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதென்பதுடன், இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித தீர்வையோ, வேறு எதனையோ பெற்றுக்கொள்ள முடியாதென்று. யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை (11.02.14) விஜயம் செய்த ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஹாலியாங் சூவுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறினார். ‘ஐ.நா.வின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினர். என்னைச் சந்திப்பதற்கு முன்னர் ஆளுநரை அவர்கள் சந்தித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வடமாகாண ஆளுநர் விருப்பம் தெரிவித்ததாக ஹாலியாங் சூ என்னிடம் கூறினார். இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு அரசாங்கத் திணைக்களங்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஹாலியாங் சூவிடம் கூறினேன். இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் தாம் கலந்துரையாடியதாகவும் இந்த விபரங்களை அவர்கள் வழங்குவார்களெனத் தாம் நம்புவதாகவும் இதனால், எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக இருக்குமென்று எதிர்பார்ப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும், தம்முடன் சேர்ந்து வடமாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்துவதற்கும் அதில் பங்குபற்றுவதற்கும் ஆளுநர் விருப்பம் தெரிவித்தாகவும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறினர். இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங்களையும் பார்க்க மக்களுக்கான அன்றாடத் தேவைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமென்பதைப் பற்றி நாங்கள் (வடக்கு மாகாணசபை) கூடிய அக்கறையுடன் உள்ளோம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவ்வாறானதொரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
மேலும், இவ்வாறாகச் சேர்ந்து செயற்பட வேண்டிய சூழல் ஏற்படும்போது நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்று ஐ.நா. பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு, அதில் எந்தவித தயக்கமும் இல்லையெனக் கூறினேன். ஆனாலும், எங்களுக்கு முக்கிய தேவையாகவிருப்பது மக்களுடைய நலன் மட்டுமே. மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தேன். அரசாங்கம் சில நடவடிக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றது. எங்களை அவற்றிலிருந்து தவிர்க்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருகின்றமையை நான் காண்கிறேன். இந்தச் சூழலிலிருந்து புதியதொரு சூழலுக்கு மாறினால் அதனை வரவேற்கின்றேன். இதன் மூலமே உண்மையான இணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும் நான் கூறினேன்’ என்றார்.