தலைமை பொலிஸ் பரிசோதகர் சடலமாக மீட்பு-

police-cidமேல் மாகாண இரகசிய பொலிஸ் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜூ. டப்ள்யூ. எம். சமரகோனின் சடலம் கொழும்பு, ஹோமாகம கொடகம பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் துப்பாக்கி சூட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்றுகாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.மு தேர்தல் காரியாலயத்தின் மீது சூடு-

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் டி.வி.உபுலின் தேர்தல் காரியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக காரியாலயம் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் தனது தேர்தல் காரியாலயத்தை பெலியத்தை தங்காலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று திறந்துள்ளார். மேற்படி ஆயுதக் குழு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்களில் அரச வாகனங்கள் பயன்பாடு-

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிற அரச வாகனங்களை கைப்பற்றுமாறு பொலீஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அரச வாகனங்கள் தொடர்ந்து பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பொது செயலாளர்களுடனான சந்திப்பின்போதும், இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

காணாமற்போனோர் தொடர்பில் யாழில் சாட்சியங்கள் பதிவு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில்  சாட்சியங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் மார்ச் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தபால் மூல வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய இடாப்பு தயாரிப்புகள் நிறைவுபெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

விமான பராமரிப்பு வளாகம் இடமாற்றம்-

தற்போது கட்டுநாயக்காவில் செயற்படும் விமான பராமரிப்பு வளாகத்தை அம்பாந்தோட்டையின் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தில், போதிய அளவிலான இடவசதி உள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு தெரிவித்துள்ளார். இதற்கமைய அதிகளவிலான சர்வதேச விமானங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாற்றம் குறித்து சகல சர்வதேச விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு வரும் சரக்கு விமானங்களும் மத்தல விமான நிலையத்தில் இறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கப் பரிந்துரை-

இலங்கைக்கான மாலைதீவின் உயர்ஸ்தானிகராக அந்தநாட்டின் முன்னாள் அமைச்சர் சாஹியா சாரிரை நியமிக்க மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் பரிந்துரை செய்துள்ளார். அவரது பெயர் விரைவில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அங்கீகாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கையும் காலத்தில், சாஹியா சாரீர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சராக பணியாற்றி இருந்தார். அவரது பெயர் உறுதிப்படுத்தப்பட்டால், தற்போது இலங்கைக்கான மாலைதீவின் உயர்ஸ்தானிகராக உள்ள ஹுசைன் சையிப், மாலைதீவுக்கு மீளழைக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றது.

147 தேர்தல் முறைபாடுகள் பதிவு-

தெற்கு மற்றும் மேல் மாகாண சபைகளின் தேர்தல்களுடன் தொடர்புடைய 147 முறைபாகடுகள் இதுவரையில் தேர்தல்கள் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்துள்ளன. அவற்றில் 43 முறைபாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கம்பஹாவில் 16 முறைபாடுகளும் களுத்துறையில் 24 முறைபாடுகளும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய தலைமையில் கெஸ்பேவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு பிரவேசித்த காவற்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பதாதைகளை கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத தேர்தல் அலுவலகங்களை அகற்ற நடவடிக்கை-

சட்டவிரோத தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் அகற்றப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் அலுவலகங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து சகல இடங்களுக்கும் பஸ் சேவை-

புகையிரத ஊழியாகளின் பணிப் பகிஸ்கரிப்பினைத் தொடர்ந்து பயணிகளின் வசதி கருத்தி வவுனியாவில் இருந்த அனைத்து இடங்களுக்கும் பஸ் வசதிகளை இன்றுமுதல் ஏற்பாடு செய்துள்ளதாக வவனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி.எஸ் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பஸ் சேவைகள் புகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பு நிறைவு பெறும்வரை இடம்பெறும் எனவும், வவுனியாவில் இருந்து தூர இடங்களுக்கான தனியார் பஸ் சேவை இடம்பெறும் இரண்டாம் குறுக்குத் தெருவில் பயணிகள் தமது பிரதேசங்களுக்கான பஸ் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலை காணாத ஓலுவில் துறைமுகம்

oluvil_harbourதென்கிழக்கு மக்களின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகளுடன். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் அங்கு இதுவரை எந்தவொரு கப்பலும் நங்கூரப்படாத நிலையில், கப்பலை காணாத துறைமுகமாக தமது பிரதேசத்திலுள்ள துறைமுகம் விளங்குவதாக உள்ளது குறித்து பிரதேச மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம் . அஷ்ரப், சந்திரிகா பதவிக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தக துறை முகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
டென்மார்க் அரசாங்கத்தினால் 10 வருட கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக வேலைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது;.
மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை, மீன்பிடி படகுகள் அதில் நங்கூரமிடுவதால் அது சுறுசுறுப்புடன் இயங்குகிறது. ஆனால் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை, துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், அங்கு இராணுவம் மற்றும் கடற்படையினரே தற்போது காணப்படுகின்றனர்..
அதேவேளை துறைமுக அபிவிருத்தி பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்ட ஈட்டு கொடுப்பணவு ஆறு வருடங்களுக்கு முன்னதாக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டும் அது இதுவரை வழங்கப்படவில்லை.
துறைமுக திறப்பு விழாவின் பிரதேச போது ஜனாதிபதி அவர்களினால் ஒரு சிலருக்கு முதற்கொடுப்பணவு என கூறி வழங்கப்பட்ட தொகைக்குரிய காசோலை கூட பணக்கொடுப்பணவு நிறுத்தம் என குறிப்பிடப்பட்டு வங்கியினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.