கட்டைவேலி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மெய் வல்லுநர் போட்டி-
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி திரு. பொன்னையா. முகாமைக்குரு கட்டைவேலி சேகரம், அருட்திரு செ.பிரின்ஸன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பாடசாலையின் அதிபர் திரு. புஷ்பாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கிராமப் பாடசாலை என்று இப்பாடசாலையை புறக்கணித்து, தமது பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் சேர்க்க வேண்டுமென்று பெற்றோர்கள் நினைக்காமல் தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்ப்பதன் மூலம்தான் பாடசாலையும் முன்னேறும், மாணவர்களும் முன்னேறுவார்கள். எங்களுடைய சமுதாயத்தின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது. ஏனைய எல்லா வளர்ச்சிகளைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி கூடினால்தான் சமுதாயம் முன்னேறும். எனவே மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சியுறும் வகையில் தங்களுடைய கல்வியிலே மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.