ரஜீவ் கொலை, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்றுகாலை தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னர், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் கருணை மனுவிற்கான பெறுபேற்றினை வழங்குவதற்கு பல வருடங்கள் விரயமாக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபை முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களின் கல்வித்தகைமை தொடர்பில் தீர்மானம்–
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கல்வித்தகைமை கட்டாயம் அல்ல என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபை முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்காக முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களை நியமிப்பதற்கு கல்வித்தகைமை கட்டாயப்படுத்தாது விரைவில் நியமனங்களை பிரதம செயலர் வழங்க வேண்டும் என அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தினால் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 14.10.2013 அன்று பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு முகாமைத்து உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வழங்கப்படும்போது க.பொ.த சாதாரணம் மற்றும் க.பொ.த உயர்தம் ஆகிய கல்வி தகைமைகள் பார்க்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான கல்வித் தகைமைகள் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கும் குறித்த சட்டம் இல்லை என்பதாலும் விரைவில் அவர்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை மனித புதைகுழி தொடர்பில் ஆய்வு-
திருகோணமலை நகர சபை கட்டத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான ஆய்வுகள் இன்று இடம்பெறுவதாக கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் மனிதர்களுடையதா? என்பதைக் கண்டறிவதற்காக கொழும்பிற்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருமலை நகரசபைக் கட்டடத்திற்கு அருகில் கிணறு வெட்டியபோது, எலும்புக்கூடுகள் சில கடந்த 12ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, திருமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு-
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக செயற்பட்ட திரு மகாலிங்கம் அவர்கள் கயானா நாட்டிற்கான தூதுவராக மாற்றம் பெற்றுச் செல்லுகின்ற நிலையில் அவர் தமிழ் மக்களுக்காற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்து வல்p மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வரகக (13.02.2014) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், 08.02.2014 திகதிய உதயன் பத்திரிகை வாயிலாக தாங்கள் கயானா நாட்டிற்கான தூதராக மாற்றம் அடைந்து செல்லும் செய்தியினை அவதானித்தேன். தாங்கள் இது வரைகாலமும் தமிழ் மக்களுக்காற்றிய மிக உயரிய சேவை தொடர்பில் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் மூன்று மண்டையோடுகள் மீட்பு-
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் மூன்று மண்டையோடுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மேற்படி மனித புதைகுழியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது. மனித புதைகுழியில் இன்றைய நாளுக்குரிய அகழ்வுப் பணிகள் இன்று காலைமுதல் மாலைவரை இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அனர்த்தம்-
அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பபுவா நியுகியா தடுப்பு முகாமில் ஏற்பட்ட அனர்த்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக ஒருவர் கொல்லபட்டதுடன் மேலும் 77பேர் காயமடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொறில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 13பேர் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பு முகாமிலிருந்து அகதிகள் பலவந்தமாக வெளியேறிய நிலையிலேயே மோதல் ஆரம்பமானதாகவும் கூறப்படுகிறது. மேற்படி முகாம் உட்பட சில முகாம்களில், அகதி அந்தஸ்து கோருபவர்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என ஐ.நா சபை குற்றம் சுமத்திய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தபால்மூல வாக்களிப்பிற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி-
மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 1,26,796 பேர் தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 63,834பேர் மேல் மாகாணத்தில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார். அத்துடன் தென் மாகாணத்தில் 62,962பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலில் தபால்மூல வாக்கெடுப்பு மார்ச் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அமைச்சர் பீரிஸ் தலைமையில் மஹிந்த சமரசிங்கவும் ஜெனீவா பயணம்-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்கவும் இடம்பெற்றுள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான சத்துணவு தொடர்பில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் கடிதம்-
யாழ். வலி மேற்கு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், கல்வியமைச்சர் கௌரவ பந்துள குணவர்த்தன அவர்களுக்கு நேற்று (17.02.2014) கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், பேருமதிப்புடையீர் மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிட்ட துறைசார் கௌரவ அமைச்சர் என்ற வகையில் பின்வரும் விடயங்களை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். Read more