ரஜிவ் காந்தி கொலை தொடர்பிலானோரை விடுவிக்க நடவடிக்கை-

rajiv gandhi killingமுன்னாள் இந்தியப் பிரதமர் ரஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றுகாலை நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர்மீதான தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று இரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த மூவரையும் உடனடியாக விடுதலைசெய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்.

northern-வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போது பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய பிரேரணை தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது.
 வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையினையே சிவாஜிலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.

ஜெனீவாவிற்கு ஆதரவு திரட்ட அரச குழு தென்னாபிரிக்கா பயணம்-

srilankaஜெனீவா மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக அரசாங்க உயர்மட்டக் குழு தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அரசாங்கத்தின் உயருதிகாரிகள் குழு தென்னாபிரிக்கா செல்கிறது. அமைச்சரும் ஆளும்கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா இக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இக்குழுவில் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வேட்பாளர் விபரப்பட்டியல் 04ம் திகதி விநியோகம்-

elections_secretariat_68தென் மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ வேட்பாளர் விபரப் பட்டியல்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுதவிர, வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ள நிலையில், மார்ச் 16ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் செயலகத்திலுள்ள முறைப்பாட்டு பிரிவிற்கு 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் தூதுவர் இராணுவத்தளபதி சந்திப்பு-

japan thoothuvarஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிதோ ஹொபோ மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்தி;ப்பில், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாயந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் செலுத்தும் பங்களிப்பு தொடர்பில் இராணுவத்தளபதி, ஜப்பான் தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட தூதுவர் நியமனம்-

cyril rambosha south africaஇலங்கையில் தனது நல்லிணக்க செயற்பாட்டை ஒரு படி மேலே கொண்டுசொல்லும் வகையில் நல்லிணக்க செயன்முறை தொடர்பாக இலங்கையுடன் செயற்படுவதற்கான விசேட தூதுவராக சிரில் றம்போஷவை தென்னாபிரிக்கா நியமித்துள்ளதாக தெரியவருகின்றது. வெள்ளையர் அரசாங்கத்துடன் 1991ஆம் ஆண்டு நிறப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்த பேச்சுவார்;த்தையில் ஆபிரிக்க தூதுக்குழுவிற்கு சிரில் றம்போஷ தலைமை தாங்கியிருந்தார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் தென்னாபிரிக்காவிற்கு இன்று விஜயம் செய்யும் இலங்கை தூதுக்குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதிவரை அங்கு தங்கியிருந்து பல உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை குறிப்பாக தென் ஆபிரிக்கா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி முக்கிய கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு-

c4 tnt explosiveயாழ். பாஷையூரிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றுமாலை 72 கிலோகிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் சந்தேகத்தின்பேரில் பாஷையூர் பகுதியினைச் சேர்ந்த ஒருவரை இன்று அதிகாலை ஓமந்தையில் வைத்து ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாஷையூர் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சி-4 வெடிபொருட்கள் 16 கிலோ மற்றும் ரி.என்.ரி. வெடிமருந்துக் குச்சிகள் 46 உள்ளடங்கலாக மொத்தம் 72 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. வெடிமருந்துகளை வைத்திருந்த இருவர் தப்பித்து நாச்சிக்குடாவிற்குச் சென்றுவிட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது. இதனால் அந்நபர்களின் குடும்பத்தினர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். தொடர்ந்து, யாழ். பொலிஸாரினால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை கைதுசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று அதிகாலை அடையாள அட்டை இல்லாமல் ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செல்ல முயன்ற பாஷையூரினைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.