திடற்புலம் பரிசளிப்பு விழா, வட மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் பங்கேற்பு-
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், நரசிங்க வைரவர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வினில் பிரதம விருந்தினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உடுவில் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தர்பனா சுதர்சன் அவர்களம், கௌரவ விருந்தினரான உடுவில் கோட்டக் கல்வி அலுவலர் திரு. ஞ.குணரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நரசிங்க வைரவர் அறிநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திரு. ஜெயப்பிரகாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அறிநெறிப் பாடசாலைகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியதுடன், அறறெநிப் பாடசாலைகளின் மூலம்தான் எங்களுடைய சமய வளர்ச்சிகண்டு வருகின்றது என்றும் அறநெறிப் பாடசாலைகள் ஊடாக எங்களுடைய பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதன் மூலம்தான் சமுதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இன்றைக்கு முக்கியமாக யாழ்ப்பாணத்தில் மிகவும் கலாச்சார சீரழிவு மலிந்து காணப்படுகின்ற நிலையில் இந்த சிறார்களுக்கு சிறுவயது முதலே சமய விழுமியங்களை கற்பிப்பதன் மூலம் அறிநெறிப் பாடசாலைகள் மிகப்பெரியதொரு சேவையினைச் செய்து வருகின்றன. எனவே இந்நடவடிக்கைக்கு அனைவரும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ கோபாலசர்மா அவர்கள் ஆசியுரை வழங்கினார்.