கூட்டமைப்புடன் பேசுவதில் சிக்கல் இல்லை-அமைச்சர் ராஜித-
அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம். கூட்டமைப்பும் இந்நாட்டின் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அவர்களுடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கையில் விரைவில் நிறுவி அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் தேவி புகையிரதம் பளை வரை பயணம்-
யாழ் தேவி புகையிரதம் கிளிநொச்சியிலிருந்து பளை வரை இன்று பரீட்சார்த்தமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலைய பொதுமுகாமையாளர் தலைமயில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிமுதல் யாழ் தேவி பளைவரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து-
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை வருவதற்கு தீர்மானித்திருந்தார். தலிபான் அமைப்பின் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் 19பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஹமீட் கர்சாயின் இலங்கைக்கான பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது-
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் 30ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. மனித புதைகுழியிலிருந்து இதுவரை 76 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எழும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம்-மாந்தை வீதியில் கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கையின்போது இந்தமனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டன.
அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் விபத்து-
கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் இன்றுகாலை கல்கமுவ பாதனிய பகுதியில் பௌசர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் அமைச்சர் சிறுகாயங்களுக்குள்ளாகி குருனாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அமைச்சரின் சாரதியும் மேலும் ஒருவரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர்.
தேர்தல் ஆணையாளருடன் விசேட சந்திப்பு
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல் செயலகத்தில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னார் மனித புதைகுழி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை-
மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியிலிருந்து இதுவரை 79 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், ஏகாதசி 11 ரூத்ர ஹோம பிரார்த்தனையும் இன்றுகாலை திருக்கேதீஸ்வர ஆலய பாலாவியில் இடம்பெற்றது. ஆலய திருப்பனிச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புனிதம் அறியாதவர்களினால் ஏற்படுத்தப்பட்ட மனிதாபிமானமற்றதும், இறை பயமற்றதுமான இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக திருக்கேதீஸ்வர ஆலய திருப்பனிச்சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை-
யாழ். நல்லுர் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பாக கிராம உத்தியேகஸ்தர் பிரிவு ஜே-112,113 ஆகிய பிரிவுகளில் உள்ள பூதவராயர் வீதி, கலைமகள் வீதி, விநாயகர் வீதி, ஆறுமுகம் வீதி, வீரபத்திரர் வீதி, புதியசெங்குந்தா விதி போன்ற வீதிகள் நல்லுர் பிரதேச சபை உறுப்பினரான சண்முகலிங்கம் சுரேஸ்குமார் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வாயிலாக வெகுவிரைவில் புனரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை விரல் அடையாளத்தை கொண்டு குற்றவாளிகளை இனங்காண திட்டம்-
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங் காண்பதற்கான தானியங்கி கை விரல் அடையாள முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.