விசேட சட்டக்குழுவை நியமிக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை-
இலங்கைமீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா சபையின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமித்தல் தொடர்பான சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையில் விசேட சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளுக்கு அமைய இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமாயின் அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொருளாதார விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமிக்குமாறு அவ்வமைச்சர்கள் கோரியுள்ளனர். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கையில் நீண்ட காலங்களுக்கு முன் சேவையாற்றிய இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இவ்வமைச்சர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துளளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை பரிந்துரை-
இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளை வெளியிட்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில், தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது. 18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் இலங்கையில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சில முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதிசெய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்க இலங்கை உரிய பதிலளிக்கவில்லையெனவும், வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத் தொடர்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பின்னணியில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை-
இலங்கைமீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேசம் சமூகம் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம்கெட்ட செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகுமெனவும் இனியும் தாமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பதில்
ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள மனிதவுரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான முன்கூட்டிய அறிக்கை குறித்த தமது கருத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் பற்றிய சர்வதேச விசாரணையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் குறித்து சர்வதேச விசாரணையொன்று பாரபட்சமின்றி இடம்பெறவேண்டும் என்று நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், உள்நாட்டில் செயற்படுத்தப்படும் பொறிமுறையை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் நவிபிள்ளையின் அறிக்கை, பக்கசார்பானதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையீடு செய்வதாகவும் அமைந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகசின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் விசாரணை-
கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுக்காலை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாரடைப்பினால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவரின் மரணவிசாரணை அறிக்கை இன்றுபிற்பகல் கிடைக்குமெனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைதி நேற்றுக்காலை உயிரிழந்த நிலையில், சிறைச்சாலையின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்டார். யாழ். மந்திகையை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜையான இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டதுடன், நீண்டகாலம் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 2012இல் நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து, வரகக ஐந்துவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகின்றது.
இந்திய மீனவர்கள் 29 பேரின் விளக்கமறியல் நீடிப்பு-
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த 29 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் நேற்றுமாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை மார்ச் 10ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி கூறியுள்ளார். இதனையடுத்து, 29 தமிழக மீனவர்கள் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 13ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக இராமேஸ்வரம், மண்டபம் புதுக்கோட்டை, கோட்டைப்பட்டிணம் பகுதிகளைச் சேர்ந்த 29மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
மீசாலையில் பால் அபிவிருத்தி நிறுவனம் திறந்து வைப்பு.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் இலங்கையும் ஜேர்மன் நாட்டின் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து பால் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை திறந்துவைத்துள்ளன. இந்நிகழ்வு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஜர்கன் மொஹாட் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையம் திறக்கப்பட்டதனூடாக சாவகச்சேரி மற்றும் மீசாலை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைந்துள்ளன.
பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை-தேர்தல் ஆணையாளர்-
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர பிரதிநிகளுடன் தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்விடயத்தை அவர் கூறியுள்ளார். அரச வாகனங்களை தம்வசம் வைத்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் அவற்றை மீளளிக்காத பட்சத்தில் அபராதத் தொகையை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கூறியுள்ளார். இதேவேளை, அரச அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார்களாயின் ஒழுக்காற்று அதிகாரிகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நேரடி விமான சேவை தொடர்பாக விளக்கம்-
பலாலி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களிலிருந்து இந்தியாவிற்கான வானூர்தி சேவைகளை மீண்டும் நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் இதற்கான விளக்கத்தை கடிதம்மூலம், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவிற்கு அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கோரிக்கை மட்டுமே என்றும் அவர் தமது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தீர்மானம் குறித்து கடந்த அமைச்சரவை தீர்மான செய்தியாளர் சந்திப்பின்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, ஒரு நாட்டிற்கு வானூர்தி சேவையினை ஆரம்பிக்க 13ஆம் அரசியல் திருத்த சட்டத்தின்கீழ் மாகாண சபை ஒன்றிற்கு அதிகாரமழல்லை என குறிப்பிட்டிருந்தார். எனினும், அமைச்சரின் இந்த கருத்து உரிய விளக்கமின்றி வழங்கப்பட்டது. ஏற்கனவே 1960ஆம் ஆண்டுகளில் பலாலி திருச்சி வாநூர்தி சேவைகள் நடத்தப்பட்டதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்றே மாகாண சபை வலியுறுத்தியது என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு நட்டஈடு-
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 265பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நட்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும் வகையில் நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. யுத்தகாலத்தில் வன்முறையால் கடும் பாதிப்புக்குள்ளான 177 பேருக்கும் சொத்து அழிவு (வீடுகள்) ஏற்பட்ட 44 பேருக்கும் வீடுகளை இழந்த அரச உத்தியோகத்தர்கள் 44 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புனர்வாழ்வு அதிகாரசபையால் 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சரத் சந்திரசிறி முத்துகுமாரண, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ.சமரசிங்க, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருது கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டுபிடிப்பு-
கல்முனை பொலிஸ் பிரிவின் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் இன்றுபகல் மர்ம வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மீனவர்களால் இப்பொருள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசாரும் விசேட அதிரடிப் படைடினரும் புலனாய்வுப் பிரிவினரும் அங்கு விரைந்து சென்று மர்மப்பொருள் குறித்து ஆராய்ந்துள்ளனர். எனினும் அது குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மேலதிக நடவடிக்கைக்காகவும் அம்பாறையில் உள்ள விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த மர்மப்பொருள் இந்தியாவில் பாவிக்கப்படும் கண்ணீர்ப் புகைக்குண்டாக இருக்கலாம் என்று அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.