க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கம் ஆதரவு-
வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு ஐந்தாவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் காணாமற் போனோரை தேடியறியும் குழுவும், வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கமும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளன. இதன்படி க.மு.தம்பிராசா அவர்களின் போராட்டத்தில் நேற்றுக் கலந்து கொண்ட காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் அவர்கள் கருத்துக் கூறுகையில்,
தம்பி த.மு தம்பிராசா அவர்களின் போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் முழுமையான ஆதரவை கொடுக்கின்றோம்.
வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் தற்போதைய நிலைமைகளை கவனிக்காமல் அவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கச் செய்யாமல், அரசியல் கைதிகள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் இன்னும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல்; விசாரணைக்குழு அமைத்து விசாரணை செய்வது என்ற பெயரில் ஒரு போலி நாடகத்தை ஆடுகின்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுள் பெண் பிள்ளைகளை சமூகமயப்படுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான ஒரு நிலையில் பின்னடைவை நோக்கிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.
அவர்களை சமூகமயப்படுத்தி சமூக அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதும் எங்களுடைய கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத்தான் நாங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடாத்தி வருகின்றோம்.
ஆகவே இந்தப் போராட்டத்தின் ஊடாகவும் காணாமற் போனவர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்வதோடு, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற எமது நிலைப்பாட்டையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
இந்த அடிப்படையில் இந்த சுலோகங்களுடன் க.மு தம்பிராசா அவர்களும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமையால், க.மு தம்பிராசாவிற்கும் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்புக்கும் காணாமற் போனோரைக் கண்டறியும் குழுவின் சார்பாக எங்கள் முழுமையான ஆதரவைக் கொடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.
வலிவடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் இணைச் செயலாளரும், தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கத முன்னைநாள் தலைவருமான திரு. தனபாலசிங்கம் அவர்கள் க.மு. தம்பிராசா அவர்களின் போராட்டத்தில் நேற்றையதினம் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையில்,
வலி வடக்கு சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை நாங்களும், எங்களது சங்கங்களும், அமைப்புகளும் முழுமையாக ஏற்றுக்கொண்டு ,ந்தப் போராட்டத்திற்கு எங்கள் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கின்றோம்.
அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை நிவர்;த்திக்கும் என்கின்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். அரசாங்கம் இவ்விடயத்தில் ஒரு தீர்வினைத் தரக்கூடிய வாய்ப்பிருந்தால் நாங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டு இதிலிருந்து விலகிக் கொள்வதாக யோசித்துள்ளோம்.
வலி வடக்கு, சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும், அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் க.மு தம்பிராசா அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தியிருந்தார். அத்துடன் இடம்பெயர்ந்தோர்க்கான நிவாரணம் சம்பந்தமாகவும் அவர் கோரிக்கைகளை முன்வைத்து சென்றமாதம் ஒரு போராட்டத்தையும் நடத்தியிருந்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் மற்றும் சில அரசியல் தலைவர்மார் வழங்கிய உறுதிமொழிகள் காரணமாக கடந்தமாதம் தனது போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு இப்போது அந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 21ஆம் திகதிமுதல் இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை நடத்தி வருகின்றார். எனவே அவரது போராட்டத்தை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தெரிவித்தார்.