க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆதரவு-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். இதன்படி க.மு.தம்பிராசா அவர்களின் போராட்டத்தில் நேற்றுமாலை கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் கருத்துக் கூறுகையில், 

இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பூர், வலிகாமம் வடக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலருணவுப் பொருட்கள் 2010ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பஞ்சமும், பட்டினியுமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைமையைப் போக்குவத்து அவர்களுக்கு உடனடியாக உலருணவு வழங்க வேண்டுமென்றும், அவர்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி கடந்தமாதம் திரு. க.மு.தம்பிராசா அவர்களால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசாங்க அதிபருடைய உறுதிமொழியை அடுத்தும், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோரினுடைய வேண்டுகொளின்படியும் பழரசம் கொடுக்கப்பட்டு உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.
ஆனால் இதுவரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்க அதிபரோ, படை அதிகாரிகளோ யாரும் முன்வராத சூழ்நிலையில் மீண்டும் க.மு தம்பிரசா அவர்களால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்தாவது நாளாக இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வந்து ஆதரவு தெரிவித்துச் செல்கின்றார்கள். நானும் இப்போராட்டதிற்கு எனது முழுமையான ஆதரவினைத் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.
இதேபோல் க.மு.தம்பிராசா அவர்களின் போராட்டத்தில் நேற்றுமாலை கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் கருத்துக் கூறுகையில்,
இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் இருந்து கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பூர், வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி க.மு தம்பிராசா அவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அத்துடன் இந்த மக்களுக்கு உலருணவு நிவாரணம் கொடுப்பதாக உறுதியளித்தும் ஒரு மாதகாலம் கடந்த நிலையிலும் அதனை இதுவரை வழங்கவில்லை. எனவே அதனை மீளவும் வழங்குமாறு கோரியும் க.மு. தம்பிராசா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆதரவு கொடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றபடியால் நானும் எனது நண்பரான சக மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் அரசியல் செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் இதில் கலந்துகொண்டு முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றோம் என்றார்.