ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தபட்டுள்ளவர்கள் குறித்த விவகாரம், சிறபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள், வடக்கின் இராணுவ குறைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை வரவேற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பளை வரையில் யாழ் தேவி பயணிக்க ஏற்பாடு-

கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வடபகுதிக்கான ரயில் பாதை துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது கொழும்பிலிருந்து யாழ் தேவி கிளிநொச்சிவரை சேவையில் ஈடுபட்டுள்ளது. எனினும் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோமீற்றர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமான பளைவரை சேவை இடம்பெறவுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு-

அரச இருதய சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.ரி.தர்மரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த பணி ப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இதனால் இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சையும், மாற்று அறுவை சிகிச்சையும் இடம்பெறவில்லை எனவும், சத்திர சிசிக்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியில் உள்ள நோயாளர்களுக்கு வேறு திகதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் பேச்சுவார்த்தை-

இந்தியா மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளதாக இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருமலை மற்றும் நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கவள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில், தமது மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என, இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கையின் கடல் எல்லையை மீறி பிரவேசித்த 91 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்திய கடல் எல்லையை மீறிய 25 இலங்கை மீனவர்களும், 5 படகுகளும் இந்திய பாதுகாப்பிரிவின் பொறுப்பிலுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு கூறியுள்ளது.

யுத்த அழிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட நடவடிக்கை-

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களின் சேதம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கையை, அடுத்தமாதம் வெளியிடவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவுபெற்றுள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் டி.சி.எ.குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறவுள்ளன. கொழும்பில் இருந்து தம்புல்லை வரையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டு, தம்புல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ஏ9 வீதியுடன் இணைக்கப்படும். இதற்கு 600 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மரணத்துக்கு மாரடைப்பே காரணம்-சிறைச்சாலை ஆணையாளர்-

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அரசியல் கைதியின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42வயதான விஸ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானிய பிரஜையாவார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது நேற்றுமுன்தினம் சிறைக்குள்ளிருந்து கோபிதாஸின் சடலம் மீட்கப்பட்டது இதன்பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டது என்பது தெரியவந்தது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல்-

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமங்கள் மற்றும் சிறு நகர மேம்பாட்டு திட்ட (புற நெகும) வேலைத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இக்குழு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய உள்ளுராட்சி சபைகளின் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படுகின்றது. இக் கலந்துரையாடலில் ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலிருந்தும் தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப அலுவலர் பெறுகை நிதி உதவியாளர் திட்டம் தொடர்பான உத்தியோகத்தர் சமூக கண்காணிப்புக் குழு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இக் கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வளவாளர்களால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினைக்கு 90 நாட்களுள் தீர்வு-பாரதீய ஜனதா கட்சி-

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று 90 நாட்களுக்குள் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும், மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே முரண்பாடில்லை என்றார்.

நாளை மறுதினம் வாக்காளர் அட்டை விநியோகம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் 28ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு மார்ச் 13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 125,000 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருமலையில் ஆயுதங்கள் மீட்பு-

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியிலிருந்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகள் 05, ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய அறிவித்துள்ளார்.