நளினி உட்பட நால்வரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 4 பேரின் விடுதலை தொடர்பில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த 18ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு மீளாய்வு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என மத்திய அரசு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவர்கள் 4 பேரின் விடுதலைக்கு எதிராக இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.
இரணைமடு நீர் விநியோகத்திட்டம்; குறித்து கூட்டமைப்பு விசேட கூட்டம்-
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்; யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல்வரை நடைபெற்றுள்ளது. இந்த விசேட பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றையதினம் கூட்டமைப்பின் நாடாளுனமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
திருவனந்தபுரம் உதவி உயர்ஸ்தானிகரகம் திறந்துவைப்பு-
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஜொய்மன் ஜோசப்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு காணப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு சர்ச்சை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ரமேஸ் சென்னித்தாலா மற்றும் கேரளாவின் முதலமைச்சர் ஓமன் செண்டிலா ஆகியோரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தாக இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-
இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மியன்மாரில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்பு நடைபெறும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியான பதிலை வழங்காத சுஜாதா சிங், அமெரிக்காவின் பிரேரணையை எழுத்து வடிவில் பாராமல் இந்தியா எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெண்ணை கடத்திய மூவர் கைது-
இலங்கைப் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மலேசியாவில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் உள்ள வங்கசா, மெலாவிட்டி பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட 20 வயதுடைய இலங்கை பெண் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அப்பெண்ணை மீட்டுள்ளதாகவும் மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவென குறித்த பெண்ணின் மைத்துனர் முறையான ஒருவர் 8,500 ரிங்கிங் பணத்தை கோரியுள்ளார். எனினும் அந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் இக்கடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முற்பகல் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து இரு இலங்கையர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் மூன்றாவது சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
சீன மீனவர்களால் தொல்லை, வடக்கு மீனவர்கள் கவலை-

வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன மீனவர்களும் தமது கடற்பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more