காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு-
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடனேயே இதை தாம் செய்வதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறுஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. 16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகம்-
சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். இதன்கீழ் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையிலோ அல்லது கட்டணங்களிலோ மாற்றம் ஏற்பட மாட்டாது என்றும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். மொழி ரீதியான பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சிங்கள மொழியில் உள்ள தகவல்களை தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்த்து உள்ளடக்கிய முதல் அடையாள அட்டை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதல் அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரா. சம்பந்தனுக்கு டெலோ கடிதம் அனுப்பிவைப்பு-
தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு-
தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 392 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும் தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையர்களுடன் கைவிடப்பட்ட படகு கரையொதுங்கியது-
65 இலங்கையர்களுடன் நடுக்கடலில் கைவிடப்பட்ட படகு ஒன்று கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து ஒரு லட்சம் ரூபா முதல் மூன்று லட்சம் ரூபா வரையில் அறவிட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இவர்கள் படகில் ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை-
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றிவரும் 250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த உத்தியோகத்தர்கள் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதன்படி இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இவ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செல்லிடத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் சிறைக்குள் எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வைத்தியரின் வாகனம்மீது துப்பாக்கிச்சூடு-
ஜனாதிபதியின் வைத்தியர் எலியந்த வைட்டின் வாகனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பிலான விசாரணைகளுக்காக, பொலீஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இரண்டு பொலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வைத்தியரின் வீடு அமைந்துள்ள மிரிஹானை எதிரிசிங்க வீதியில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படும்போது, வைத்தியர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும், அவரது சாரதி மாத்திரமே இருந்ததாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப்படையின் புதிய தளபதி பதவிப் பிரமாணம்-
விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மாஷல் கோலித அரவிந்த குணதிலக இன்று பதவி ஏற்றுள்ளார். விமானப் படையின் 14ஆவது தளபதியாக இவர் நியமனம் பெற்றுள்ளார். பண்டாரவளை புனித தோமஸ் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்ற கோலித குணதிலக, கெடட் அதிகாரியாக 1980ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார். 1982ஆம் ஆண்டில் அவர் விமானியாக பதவியுயர்வு பெற்றார். இவர் ‘ரணவிக்ரம’ மற்றும் ‘ரணசூர’ பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். சரக்கு விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் விமானியான இவர், சுமார் 4ஆயிரம் மணிநேரம் வானில் சஞ்சரித்துள்ளார்.
முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்பு-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னரும் மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் 56 பக்க அறிக்கை-
2013ம் ஆண்டு வரையில் தீர்க்கப்படாத இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான 56 பக்க அறிக்கை ஒன்றை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல்கள் எவையும் முறையாக இடம்பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சிவில் பிரதிநிதிகள் கைது செய்யப்படுகின்றமை, தாக்கப்படுகின்றமை, ஊடகவியலாளர்கள் மற்றும் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டுள்ள பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றமை போன்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பலவந்தமாக காணாமல் போதல், காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக் கூறாத் தன்மை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. துன்புறுத்தப்படுதல், ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுதல் என்பன தொடர்கின்றன. அரசாங்கத்துக்கு அடிபணிந்து நடக்காதவர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள், கைதுகள், போன்றவையும் குற்றச்சாட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் இடம்பெறுகின்ற படையினரின் சட்டரீதியற்ற கொலைகள், அரசாங்கத்துடன் இணைந்த ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் போன்வற்றையும் அமெரிக்கா தமது அறிக்கையில் கண்டித்துள்ளது. அத்துடன் பேச்சு சுதந்திரம், அச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், ஒழுங்கமைப்பு மற்றும் இயக்க சுதந்திரம் என்பன மீறப்படுகின்றன. அரசாங்கத்தை விமர்சிக்கின்ற ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். செய்தி இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. வடக்கில் இன்னும் பல காவற்துறை மற்றும் இராணுவ சோதனை சாவடிகள் காணப்படுகின்றன. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு, தங்களின் வாழ்விடத்தை தெரிவுசெய்வதற்கான சுதந்திர மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. இதேவேளை, தமிழ் மக்களையும், விசேட தேவை உடையோரையும் இழிவாக நடத்தும் செயற்பாடுகளும் இலங்கையில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சிறுபான்மை மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் தொழிலாளர்களின் உரிமைகள் கட்டுப்படுத்துப்படுகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.