ஏழாலையில் 35 பிள்ளைகளுக்கு இலவச ரியூசன் வகுப்பு நடத்த ஏற்பாடு-

யாழ். ஏழாலை பகுதியில் இருக்கின்ற ஏழு பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 35 பிள்ளைகளுக்கு இலவசமாக டியூசன் வகுப்பு நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த 26.02.2014 புதன்கிழமை யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க பாலர் முன்பள்ளியில் நடைபெற்றது. லண்டனிலே இருக்கின்ற எங்கள் தோழர் மணிவண்ணன் அவர்களும், அவருடைய தோழர்களும் நிதியுதவி வழங்கியமைக்கு அமைவாக இந்த பிள்ளைகளுக்கான டியூசன் வகுப்பு நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு ஏழாலை சைவ சன்மார்க்க பாலர் முன்பள்ளியின் பொறுப்பாளர் திருமதி மல்லிகா ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி பாலர் முன்பள்ளியின் ஆசிரியர்களான க.அருந்தவநேசன், நவகேதீஸ்வரன் ஆகியோரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இதனை ஆரம்பித்து வைத்துள்ளனர். இந்நிகழ்வில் ஊர்ப் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

ஜெனீவாவுக்கு குழுவை அனுப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றது எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். யாழில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாண சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வுக்கான எமது கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் நாம் சர்வதேச இணக்க செயற்பாட்டையே விரும்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைமீது நீசா பீஸ்வால் மீண்டும் குற்றச்சாட்டு-

நீதி, பொறுப்புடைமை அல்லது ஒருங்கிணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் செயற்பட்டிருக்கவில்லை என்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்காயன உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் தளத்தில் அவர் இந்த பதிவை செய்திருக்கிறார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் இந்த மாதம் 4ம் திகதி இநதியாவுக்கான விஜயததை மேற்கொள்கிறார். இதன்போது இந்தியாவின் அரச தலைவர்களை சந்தித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடாபில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு, எலும்புக்கூடுகளை இராசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த உத்தரவு-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதவான் தங்கராசா பரஞ்சோதி, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன், இரசாயன பகுப்பாய்விற்கும் உத்தரவிட்டுள்ளார். புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியார் காணியொன்றை உழவு இயந்திரம் பயன்படுத்தி துப்புரவு செய்தபோது 09 எலும்புக்கூடுகள் 27ஆம் திகதி இரவு கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள் பாயில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, மனித எச்சங்கள் விடயத்தில் தொடர்பில்லை-இராணுவம்-

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு பகுதியில் விவசாயத்துக்காக ஒரு பகுதி நிலம் தோண்டப்பட்டபோது, மனித எலும்பு கூடு ஒன்று அவதாகிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், அங்கு மேலும் 8 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லபட்டவர்களின் எலும்புக்கூடுகளே இவ்வாறு மீட்கப்பட்டிருப்பதாக சிலத்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ஆனால் அவை உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த பிரேரணைமீதான வாக்கெடுப்பில் ஜப்பான் பங்கேற்காது-

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் கொண்டுவரப்படும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் பங்கேற்காது என அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் யோசனை பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நினைக்கவில்லை என ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் ஜப்பான் வாக்கெடுப்பில் பங்கேற்காது என ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையினர்மீது முதன் முறையாக வழக்கு பதிவு-

தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை கடற்படையினர்மீது ராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4பேர் கடந்த முதலாம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியதோடு, மீன்களையும், வலைகளையும் பறித்துச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர் மீனவர் சகாயராஜ் கடந்த மாதம் 2ம் திகதி ராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்தில் இலங்கை கடற்படையினர்மீது முறைப்பாடு கொடுத்துள்ளார். இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவில் பொலீசார் நேற்றிரவு இலங்கை கடற்படையினர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தமாதம் 3ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற பாம்பன் மீனவர் ஜாண் பிரிட்டோ என்பவரின் வலைகளை இலங்கை மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பறித்துள்ளனர். இது குறித்து, பாம்பன் பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி இலங்கை மீனவர்கள்மீது பிரிட்டோ முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி இலங்கை மீனவர்கள்மீது 23 நாட்களுக்கு பிறகு பாம்பன் காவல்துறையினர் நேற்றிரவு வழக்குப் பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் கலந்துரையாடல்-

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது. குறித்த சந்திப்பானது பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனை பிரிவுத் தூதுவர் ஜோன்நீல் தலைமையில் இன்றுகாலை 10 மணி முதல் ஏ9 வீதியில் உள்ள ‘எக்ஸ்போ பவிலியன்’ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது. அதன்படி பிரித்தானிய பிரஜைகள் மற்றும் அந்தநாட்டில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் என தற்காலிகமாக நாட்டில் தங்கியிருப்போருக்கு ஏற்படும் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் வழங்க முடியாத உதவிகள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் கலந்துரையாடலாகவே இது அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

55ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளுக்காக 55 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சாவடிகளின் நடவடிக்கைகள் மற்றும் வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் தொடர்பில் அந்த உத்தியோகத்தர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் மீதான தாக்குதலில் ஒருவர் காயம்-

யாழ். ஏழாலை வடக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனத்தின்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றுஇரவு தாக்குதல் மேற்கொண்டதுடன் இதனால் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுசென்று விடும் வாகனம்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8பேர் கொண்ட குழுவொன்று கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி வாகனத்தினை சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு தீக்கிரையால் 3 இலட்சம் ரூபா பொருட்கள் நாசம்-

யாழ். புத்தூர் பெரியபொக்கணைப் பகுதியிலுள்ள நாளாந்த கூலி தொழிலாளியான இரத்தினசிங்கம் துஷ்யந்தன் என்பவரது வீடு நேற்று இரவு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த 3 இலட்சத்துக்கும் அதிமான பொருட்களும் தீயில் கருகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த தொழிலாளிக்கு தற்காலிக குடிசையினை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் இன்று அமைத்துக்கொடுத்துள்ளனர். மேற்படி தொழிலாளியின் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி திடீரென வெடித்துள்ளதுடன் மின்சார இணைப்புக்களுக்கு தீ பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றுவிட்டனர். தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அது கைகூடாத நிலையில் வீடு முற்றாக எரிந்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை கணக்காளர் வீட்டின்மீது கல்வீச்சு-

மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளரின் வீட்டின்மீது இன்று அதிகாலை 2மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. திருமதி சிவராஜாவின் பூம்புகாரில் உள்ள இல்லத்தின்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தின் யன்னல் கதவுகளுக்கு சேதமேற்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியோரை அடையாளம் காணமுடியாவிடினும், வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் தாக்குதல் நடத்தப்பட்டோர் பதியப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் திருமதி சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவினருடன் பொலீஸ் மாஅதிபர் சந்திப்பு-

வவுனியா மாவட்டத்தில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா மாவட்டத்தின் 70 சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து சமூக பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலமாக கருத்துக்கள் கோரப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, கிராமசேவகர்கள், சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்முதல் தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்-

தபால் மூல வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடம்பெறும் என தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏனைய வாக்களார் அட்டைகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.