க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது-
வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,
எமது போராட்டம் நேற்று எட்டாவது நாளாக தொடர்ந்திருந்தது. இதன்போது எமக்கு ஆதரவளிக்கும் முகமாகவும் எம்மை உற்சாகப்படுத்தும் வகையிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு நல்கியிருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர்களான வைத்தியக் கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன், கனகசுந்தரசுவாமி வீரவாகு ஆகியோரும் மேற்படி இப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக நேற்று வருகை தந்து அவர்களும குறிப்பிடத்தக்களவு நேரம் எம்முடன் இருந்து பங்களிப்புச் செய்திருந்தனர். காலவரையறையற்ற இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
வலிவடக்கு சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களின் காணிகளிலிருந்து அரசபடைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்றும், ஏற்கனவே உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி இந்த சத்தியாக்கிரப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.