மீள்குடியேறிய பெரியதம்பனை மக்கள் அவல வாழ்வு- 

மீள்குடியேறிய காலம்முதல் தமது அன்றாட கடமைகளை செய்யக்கூட இடமின்றி அவலவாழ்வு வாழ்வதாக வவுனியா பெரியதம்பனை மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா, பெரியதம்பனை கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றபோதே அம்மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். வவுனியா, பெரியதம்பனை மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றநிலையில் நேற்றுமாலை கூட்டமைப்பினருக்கும் பெரியதம்பனை, கன்னாதிட்டி, நீலியாமோட்டை, பிரமானங்குளம், தம்பனைக்குளம் ஆகிய கிராம மக்களுக்குமிடையிலான சந்திப்பு மேற்படி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மீள்குடியேறிய தமக்கு நிரந்தர வீட்டுத் திட்டங்களோ, மலசலகூட வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாது குடிநீர்ப் பிரச்சினையுடனும் காட்டு யானைகளால் பீதியின் மத்தியிலும் வாழ்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த கூட்டமைப்பினர் தாம் இதுதொடர்பில் கூடுதல் கவனம் எடுப்பதுடன், உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். இக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 44 பேர் கைது-

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரையில் 42 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பணியகம் கூறுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் 120 முறைப்பாடுகளும், கம்பஹாவில் 48 முறைப்பாடுகளும், களுத்துறையில் 60 முறைப்பாடுகளும், காலியில் 45 முறைப்பாடுகளும், மாத்தறையில் 67 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டையில் 52 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அரசாங்கம்மீது நீசா பிஸ்வால் குற்றச்சாட்டு-

நீதி, பொறுப்புடைமை அல்லது ஒருங்கிணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் செயற்பட்டிருக்கவில்லை என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் இம்மாதம் 4ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்தியாவின் அரச தலைவர்களை சந்தித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடாபில் பேசுவாரென்று தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளை நம்புவதால் பலன் இல்லை- அமைச்சர் டியூ குணசேகர-

எந்த ஒரு பிரச்சினைக்கும் வெளிநாடுகளையே நம்பி இருப்பதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டில் ஏற்படுகின்ற எந்த ஒருபிரச்சினையானாலும் அது தொடர்பில் ஆலோசனை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை நாடுகிறது. ஆனால் அது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தவறுகிறது. ஆனால் தொடர்ந்து அவ்வாறு செய்துகொண்டிருப்பதால், இறுதியில் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவானாலும், பிரித்தானியாவானாலும், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அந்நாடுகளால் கூட்டமைப்புக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புகளுக்கும் எல்லைகள் இருக்கின்றன என சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசனை-

காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிலாக, ஆளில்லா சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆலோசனை அடிப்படையில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கையில் காணாமல் போன 16000 பேர் குறித்த தரவுகள் செஞ்சிலுவை சங்கத்திடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான மரண சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் முயற்சித்த போதும், அதற்க எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஆளலில்h சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்துகிறது. சர்வதேச ரீதியாக பல நாடுகளில் இந்த நடைமுறை காணப்படுவதாகவும், இது மரண சான்றிதழுக்கு நிகரானது எனப்படுகின்றபோது, அதனை குற்றவியல் தொடர்பான நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்-

வங்காளவிரிகுடா பிராந்திய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி அமைப்பான பிம்ஸ்ட்டெக் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை மியன்மார் செல்லவுள்ளார். இம் மாநாட்டில், பங்களாதேஸ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டுக்கு சமாந்தரமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்குமிடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜெனீவா மாநாட்டின்போதான அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் இதன்போது பேசப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் ஏற்கனவே நேற்று மியன்மார் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் ஜெனீவா மாநாட்டிற்கு செல்லவுள்ளார்.

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கோரல்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் நிமித்தம், தங்களின் கட்சி காரியாலயங்களுக்கு முன்னால் வேட்பாளர்களின் பெயர் மற்றும் தெரிவு இலக்கத்தை காண்பிக்கும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகளை வைக்க ஐக்கிய தேசிய கட்சி அனுமதி கோரவுள்ளது. கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விரைவில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் பொருட்டு தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இம்மாதம் 21ம் திகதியுடன் நிறைவடைகிறது. தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு, பெப்ரல் கோரிக்கை விடுத்துள்ளது.

இணக்கப்பாட்டை மீறி இந்திய மீனவர்கள் தொழில் புரிவதாக குற்றச்சாட்டு-

தமிழகம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திர படகு மீனவர்கள் நேற்று முதல் தங்களின் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, ஒருமாத காலத்துக்கு இயந்திரபடகுகளின் மீன்பிடியை தவிர்ப்பதாக தமிழக மீனவர்களால் இணங்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த பெப்ரவரி 13ம் திகதிமுதல் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வந்தனர். எனினும் உடன்படிக்கையின்படி மேலும் 2 வாரங்கள் இருக்கின்றபோதிலும், அவர்கள் குறித்த உடன்படிக்கையை மீறி நேற்றுமுதல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் தமது தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தமிழக மீனவர்கள் மீண்டும் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

ஆளும்கட்சி அமைச்சர்கள் தேர்தல் சட்டமீறல்-பவ்ரல்-

ஆளும்கட்சி அமைச்சர்களே பாரியளவில் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக தென் மாகாணசபையில் அதிகளவில் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி அலுலகங்கள் அமைக்கப்பட்டு பிரசாரம் செய்யப்படுகின்றது. தென் மாகாணத்தில், அரசாங்க அதிகாரிகள் நேற்று விவசாய உபகரணங்களை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. சில அமைச்சர்கள் பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் இணைப்பு அலுவலகங்களை அமைத்துள்ளனர். தேர்தல் தொகுதியொன்றில் ஒரு கட்சி ஒரு கட்சிக் காரியாலயத்தை மட்டுமே நடத்திச் செல்ல முடியும் எனவும், ஒரே தேர்தல் தொகுதியில் பல கட்சிக் காரியாலமகளை அமைப்பது சட்டவிரோதமானது என அவர் கூறியுள்ளார்.