ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்-

un manitha urimai peravaiஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமையில் இம்முறை கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையின் நல்லிணக்க மேம்பாடுகள் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள அறிக்கை குறித்து இக் கூட்டத் தொடரின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையின் அவசியத்தை அவர் தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார். எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமது நாடு தீர்மானம் ஒன்றை முன்வைக்கும் என அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பிரித்தானியா அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

அரசே தேசியப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வைத்தது-ஆனந்தன் எம்.பி-

தேசிய பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கமே ஏற்படுத்தியதியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்துடன் பேசி எதனையுமே செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் எதனையும் செய்ய தயாராக இல்லை. இதனால் தான் நாம் சர்வதேச சமூகத்தினை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது. போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்காத காரணத்தினால் தான் சர்வதேச சமூக்தினை நோக்கி செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வழிவகுக்கும் என நம்புகின்றோம் என அவர் முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அலுகோசு நியமனம்-

கொழும்பு வெலிகடை சிறைச்சாலைக்கான அலுகோசு பதவிக்காக இன்று ஒருவர் நியமிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமனம் பெறுபவருக்கு சுமார் ஒரு மாதகால பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இதன்போது சிறைச்சாலை சட்டதிட்டங்கள் தொடர்பில் அவருக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அலுகோசு பதவிக்காக இருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விருவரும் நிர்வாகத்திடம் அறிவிக்காமலேயே சேவையிலிருந்து விலகிச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பவ்ரல் தீர்மானம்-

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் சட்டத்திட்டங்களில் காணப்படும் சிக்கல்நிலைகள் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலேசிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

மலேசியாவின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் டட்டுக் செரி மொஹமட் நஸ்ரி அப்துல் அஸீஸ் இலங்;கையில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் இந்த விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. மலேசிய அமைச்சர் கொழும்பு உட்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் 2014ஆம் ஆண்டில் மலேசிய விஜயம் என்ற தொனிப்பொருளிலில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை விஜயத்தின் பின்னர் மலேசிய அமைச்சர் டட்டுக் செரி மொஹமட் நஸ்ரி அப்துல் அஸீஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு-

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள பிரேரணைக்கு வலுசேர்க்கும் வகையில் கூட்டமைப்பு ஏனைய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் எனினும் அதற்கான திகதி இன்றும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் தூர சேவை பேரூந்து உரிமையாளர் சங்கம் அங்குரார்ப்பணம்-

யாழ் தூரசேவை பேரூந்து உரிமையாளர் சங்கம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று காலை 10 மணியளவில் யாழ் ஸ்டான்லி வீதியில் குறித்த சங்கத்தினை திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, பேருந்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.