கொழும்பு கோட்டை – பளை ரயில் சேவை நாளை ஆரம்பம்-

yaaldeviகொழும்பிலிருந்து பளை வரையான ரயில் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தில் கிளிநொச்சி வரை முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை நாளைமுதல் பளை வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை காலை 9.20 அளவில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டைக்கும் பளைக்கும் இடையிலான ரயில் சேவை தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி தினமும் காலை 05.45 இற்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் பிற்பகல் 1.21இற்கு பளையை சென்றடையும். பளையில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் காலை 10.40இற்கு புறப்பட்டு மாலை 6.25இற்கு கொழும்பை அடையும். இதேவேளை பளைக்கும் கொழும்பிற்கும் இடையிலான கடுகதி ரயில் சேவை ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. காலை 06.50 இற்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில் நண்பகல் 12.27 இற்கு பளையை சென்றடையும். பளையில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் கடுகதி ரயில் பிற்பகல் 02.15இற்கு புறப்பட்டு இரவு 08.05இற்கு கொழும்பை அடையும். இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ். பளை வரையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் ஒன்றையும் புதிதாக சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. பளை நோக்கிய சொகுசு ரயில் சேவை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. தினமும் பிற்பகல் 2.45ற்கு கொழும்பிலிருந்து பயணத்தினை அரம்பிக்கும் இந்த சொகுசு ரயில் இரவு 08.28 இற்கு பளையை சென்றடையும். காலை 06.50 இற்கு பளையில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் இந்த சொகுசு ரயில் நண்பகல் 12.50 இற்கு கொழும்பு கோட்டடை ரயில் நிலையத்தினை அடையும். இந்த ரயிலுக்கான பயணச் சீட்டை வடபகுதி ரயில் மார்க்கத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் முற்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார். இந்த செகுசு ரயில் சேவைக்காக கொழும்பு கோட்டையிலிருந்து பளை வரை ஆயிரத்து 400 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது