மேல் மாகாணசபைத் தேர்தலின்போதான ஆதரவு குறித்து விரைவில் அறிவிப்பு-மாவை-

Mavai Senathirajah TNA_2எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலின் போதான தமது ஆதரவு தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது மேல்மாகாண மக்கள் முன்னணி;யும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தன. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினனரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் இதன்போது கருத்துக்களை பாரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து விரைவில் இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஐனநாயக மக்கள் முண்ணனி ஆதரவு வழங்கியிருந்தது. அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதுடன், தற்போதும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே கொழும்பில் செறிந்து வாழும் வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் அரசின் சூழ்ச்சிகளுக்கு உட்படாமல் தமது வாக்குகளை சிதறடிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மாவை சேனாதிராஜா அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததற்கும், குறைவடைந்து செல்வதற்கும் முழுப்பொறுப்பு இராணுவமே. இராணுவ அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் பாதுகாப்பு தேவைக்கென தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயுள்ளது. இதனால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வர விரும்பவில்லை. நாட்டைவிட்டு தற்போதும் பலர் வெளியெறி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் இராணுவத்தின் நடவடிக்கைகளே முழுகாரணம். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வடக்கில் முன்பு இருந்ததைவிட சரிக்கு அரைவாசியாக குறைந்துவிட்டது. எனவே எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலையில் எமது குடிப்பரம்பல் உள்ளது. ஆகவே தமிழ்மக்கள் எங்கிருந்தாலும் ஒன்றுபட்டு தமிழினப்பரம்பலை அதிகரிக்க உதவுவதோடு வாக்குப்பலத்தை அதிகரிக்கவும் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.