Header image alt text

வடமாகாண சபை உறுப்பினர்கள் மாமடு பழம்பாசி மக்கள் சந்திப்பு-

ravikaran_visit_mamadu_006முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன் மற்றும் ரவிகரன் ஆகியோர் பிரதேச மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்கள். வீதிகள் புனரமைப்பு தொடர்பில் மாமடு பழம்பாசி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்ற அவர்கள், அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். மாமடு சந்தியிலிருந்து பழம்பாசி சந்தி வரையான சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரமான பாதையின் சீர்கேட்டை அம் மக்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் இப்பாதையினை பழம்பாசி, சாளம்பை, ஒதியமலை, பெரியகுளம், பழைய மாமடு வீதி, மாமடு சந்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 350 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துவதையும் சுகயீனமானவர்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், பாடசாலை மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பஸ் போக்குவரத்து பிரச்சினை என்பன தொடர்பிலும் அவர்கள் விளக்கியுள்ளனர். மக்களின் குறைகளை கேட்டறிந்த வட மாகாணசபை உறுப்பினர்கள், குறைகளைத் தீர்ப்பதற்கு உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதூக உறுதியளித்துள்ளனர்.

ravikaran_visit_mamadu_005ravikaran_visit_mamadu_003ravikaran_visit_mamadu_001

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி படையினரால் அகற்றல்-

IMG_4137வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலய சுற்றுவேலிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு வயாவிளான், குட்டியபுலம் பகுதியினூடாக செல்லும் உயர் பாதுகாப்புவலய எல்லை வேலியை நேற்றுமாலை அகற்றும் பணியில் படையினர் ஈடுபட்டிருந்தனர். கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை. யுத்தம் முடிவடைந்து 5வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றப்படாமல் அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பாட்டு பிரதேசத்தை சுற்றி உயரமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பிரதேசமாகக்கப்பட்டிருந்தது. அங்கு தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி அப்பிரதேச மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலய எல்லை கம்பி வேலிகளை அகற்றும்பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழுவினரின் ஜெனிவா விஜயம்-

imagesCAH8ITDXஇந்த முறை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்குகொள்ளும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேற்று ஜெனிவா நகரை சென்றடைந்துள்ளனர். இந்த குழுவினார் நாளை ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பங்குகொள்கின்றனர். ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு ஐ.நா பொதுச் செயலாளர் பான்கி மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை ஆகியோர் தலைமையில் நேற்று ஆரம்பமானது. இதனிடையே, ஜீ.எல் பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதன்பிள்ளையை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், இலங்கை தொடர்பான நவனீதன்பிள்ளையில் அறிக்கை எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேவேளை இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வையா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் 25வது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-

mahinda manmohan meetமியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (பிம்ஸ்டெக்) அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மியன்மார் சென்றுள்ளார். இதேவேளை இலங்கை தமிழ் மக்களின் புனர்வாழ்வு பணிகளுக்காக தொடர்ந்தும் பொறுப்புடன் செயலாற்றப்படும் என இந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே அந்த மக்களுக்கு வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் நிர்மாணித்து கொடுக்கப்படுகின்றது. நல்லிணக்கம் மற்றும் 13வது அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான யாழ்தேவி ரயில் போக்குவரத்து-

yaal deviகிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் இன்று நண்பகல் பளை ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. யுத்தத்தின்போது சேதமடைந்த ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டதை குறிக்கும் முகமாக கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இந்த புகையிரத சேவை தொடர்பிலான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கின் பசுமையை அழிப்பதற்கே பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன-த.சித்தார்த்தன்-

download (1)வடக்கு, கிழக்கின் மண்ணின் வளத்தையும் பசுமையையும் அழிப்பதற்காவே இந்தியாவிலிருந்து பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதீனியம் ஒழிப்புப் படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது பாதீனியம் என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. 1987அம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இந்தியப் படையினர் இலங்கைக்குள் கால் அடி எடுத்து வைத்தபோது அவர்கள் பாதீனியம் என்ற கொடிய செடியையும் கெணர்டுவந்தனர்.

இந்தியப் படையினர் இலங்கை வந்தபோது இந்தியப் படையினரால் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எமது மக்கள் நம்பினர். ஆனால் மாறாக யத்தம் தொடர்ந்தது. பேரழிவுகளும் தொடர்ந்து இன்றுவரை எமது மக்கள் மீள முடியாத துயரத்துக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.

வடக்கு, கிழக்கின் மண் வளத்தையும் பசுமையையும் ஒழிக்கவே அவர்கள் பாதீனியத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை பாதீனியம் ஒழிப்பது தொடர்பில் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம். யாராலும் அதனை முன்னின்று அழிக்க முடியவில்லை.

download (3)ஆனால், இன்று அதனை அழித்தே தீருவோம் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றார். இதற்கென ஒரு படையணி இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அவர் விவசாய அமைச்சர் என்பதற்கு அப்பால் ஒரு சூழலியலாளரும் கூட, எனவே அவருடைய பாதீனியம் ஒழிப்பு முயற்சிக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவருடைய நடவடிக்கைக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். எனவே, எமது விவசாயத்தை அழிக்கும் பாதீனியத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

download (2)இதேவேளை, பாதீனிய செடியை இல்லாதொழிப்பதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சு அமைத்துள்ள விசேட அணியில் 400பேர் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 10பேர் கொண்ட குழுக்களாக 40 இடங்களில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டங்களை நாளை புதன்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்காக உழைக்கும் மிகப்பெரும் சக்தியான ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிக்க வேண்டும்-த.சித்தார்த்தன்-

Sithar-ploteஎம்மோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்திகளான மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமது ஆதரவினை வழங்குவதன்மூலம் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியுமென புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியினால் யாழ் நகரில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், நாம் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம். இந்நிலையில் நடைபெறவுள்ள மேல் மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் அவர்களின் தலைமையிலான அணி களமிறங்குகிறது.

எங்களோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்தியாக ஜனநாயக மக்கள் முன்னணியும், மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய உழைப்பு கட்சிகளுக்காக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கான உழைப்பாக இருந்ததை நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே தார்மீக ரீதியாக தமிழ் பேசும் மக்கள் தங்கள் ஒத்துழைப்பினை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலமே தமிழர்களின் அடையாளத்துடன் கூடிய பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்-

bomp_blast_kilinochi_003untitledகிளிநொச்சி, திருமுறிகண்டி, பகுதியில் நேற்று (03.03.2014) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்பு குவியலில் இருந்து இரும்புகளை எடுக்க முற்பட்டபோது அதனுள் இருந்த வெடி பொருளொன்று வெடித்ததனால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் ஒரே குடுமம்பத்தைச் சேர்ந்தவர்களாவர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளனர். அழகர் இராமநாதன் (வயது 53), அழகர் இராசந்திரன் (வயது 51), இராமசந்திரன் அல்லிநாயகி (வயது 45), மற்றும் ஜெயராம் கிருஷ்ணவேணி (வயது 27) ஆகியோரே காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.