தமிழ் மக்களுக்காக உழைக்கும் மிகப்பெரும் சக்தியான ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிக்க வேண்டும்-த.சித்தார்த்தன்-

Sithar-ploteஎம்மோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்திகளான மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமது ஆதரவினை வழங்குவதன்மூலம் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியுமென புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியினால் யாழ் நகரில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், நாம் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம். இந்நிலையில் நடைபெறவுள்ள மேல் மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் அவர்களின் தலைமையிலான அணி களமிறங்குகிறது.

எங்களோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்தியாக ஜனநாயக மக்கள் முன்னணியும், மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய உழைப்பு கட்சிகளுக்காக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கான உழைப்பாக இருந்ததை நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே தார்மீக ரீதியாக தமிழ் பேசும் மக்கள் தங்கள் ஒத்துழைப்பினை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலமே தமிழர்களின் அடையாளத்துடன் கூடிய பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.