வடமாகாண சபை உறுப்பினர்கள் மாமடு பழம்பாசி மக்கள் சந்திப்பு-
முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன் மற்றும் ரவிகரன் ஆகியோர் பிரதேச மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்கள். வீதிகள் புனரமைப்பு தொடர்பில் மாமடு பழம்பாசி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்ற அவர்கள், அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். மாமடு சந்தியிலிருந்து பழம்பாசி சந்தி வரையான சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரமான பாதையின் சீர்கேட்டை அம் மக்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் இப்பாதையினை பழம்பாசி, சாளம்பை, ஒதியமலை, பெரியகுளம், பழைய மாமடு வீதி, மாமடு சந்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 350 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துவதையும் சுகயீனமானவர்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், பாடசாலை மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பஸ் போக்குவரத்து பிரச்சினை என்பன தொடர்பிலும் அவர்கள் விளக்கியுள்ளனர். மக்களின் குறைகளை கேட்டறிந்த வட மாகாணசபை உறுப்பினர்கள், குறைகளைத் தீர்ப்பதற்கு உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதூக உறுதியளித்துள்ளனர்.