வடக்கு, கிழக்கின் பசுமையை அழிப்பதற்கே பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன-த.சித்தார்த்தன்-

download (1)வடக்கு, கிழக்கின் மண்ணின் வளத்தையும் பசுமையையும் அழிப்பதற்காவே இந்தியாவிலிருந்து பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதீனியம் ஒழிப்புப் படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது பாதீனியம் என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. 1987அம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இந்தியப் படையினர் இலங்கைக்குள் கால் அடி எடுத்து வைத்தபோது அவர்கள் பாதீனியம் என்ற கொடிய செடியையும் கெணர்டுவந்தனர்.

இந்தியப் படையினர் இலங்கை வந்தபோது இந்தியப் படையினரால் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எமது மக்கள் நம்பினர். ஆனால் மாறாக யத்தம் தொடர்ந்தது. பேரழிவுகளும் தொடர்ந்து இன்றுவரை எமது மக்கள் மீள முடியாத துயரத்துக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.

வடக்கு, கிழக்கின் மண் வளத்தையும் பசுமையையும் ஒழிக்கவே அவர்கள் பாதீனியத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை பாதீனியம் ஒழிப்பது தொடர்பில் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம். யாராலும் அதனை முன்னின்று அழிக்க முடியவில்லை.

download (3)ஆனால், இன்று அதனை அழித்தே தீருவோம் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றார். இதற்கென ஒரு படையணி இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அவர் விவசாய அமைச்சர் என்பதற்கு அப்பால் ஒரு சூழலியலாளரும் கூட, எனவே அவருடைய பாதீனியம் ஒழிப்பு முயற்சிக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவருடைய நடவடிக்கைக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். எனவே, எமது விவசாயத்தை அழிக்கும் பாதீனியத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

download (2)இதேவேளை, பாதீனிய செடியை இல்லாதொழிப்பதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சு அமைத்துள்ள விசேட அணியில் 400பேர் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 10பேர் கொண்ட குழுக்களாக 40 இடங்களில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டங்களை நாளை புதன்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.