க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,   

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பதினோராவது தினமான நேற்றுமுன்தினம் வலிவடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் இணைச் செயலாளர் தனபாலசிங்கம் அவர்களும், பொருளாளர் குணசேகரன் அவர்களும் வந்து சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றிருந்தார்கள். நேற்றையதினம் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் அவர்களும் வந்து சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றிருந்தார். அத்துடன் தையிட்டி கிராம முன்னேற்றக் சங்க உறுப்பினர்களும் இந்த சத்தியாக்கிரகத்தில் நேற்று கலந்துகொண்டிருந்தார்கள்.  இந்த போராட்டம் பதின்மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. நேற்று முன்தினம் அரசாங்க அதிபர் அலுவலகத்துடன் நான் தொடர்புகொண்டு வலிவடக்கு மக்களின் உலருணவு சம்பந்தமாக கதைத்தபொழுது,

தங்களுக்கு அந்த மக்களின் இருப்பிடங்களையும், அவர்களது மலசல கூடங்களையும் திருத்தியமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலைகளை மிக விரைவாக தாங்கள் செயற்படுத்தப் போவதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் யாழ் மாவட்ட அதிகாரி திருமதி மோகனேஸ்வரன் கூறியிருந்தார்.
தொடர்ந்து உலருணவு சம்பந்தமாக நான் அவரிடம் கேட்டபொழுது, மிக விரைவில் அதாவது எந்த நேரத்திலும் அதற்கு ஆவன செய்வது தொடர்பிலான பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்றுகாலை முதல் காணாமற் போயுள்ளது. அவர் இன்றுகாலை சத்தியாக்கிரகப் போராட்டத்தினை முன்னெடுக்க வந்தவேளை அவருடைய கொட்டகை மற்றும் பதாகைகள் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தம்பிராசா, 13ஆவது நாளாக நான் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று என்னுடைய கொட்டகைகள் பதாகைகள் காணாமல் போயுள்ளன. இரவு இப்பகுதியில் இராணுவத்தினர் இருந்ததாக சிலர் கூறினர். அவர்களே இதனைக் கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.
அத்துடன், இன்றுமாலை போராட்டத்தினை முடித்த பின்னர் இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.