துரித கதியில் யாழ். ரயில் நிலையம் புனரமைப்பு-

jaffna railway.......jaffna railway ....யுத்தத்தின்போது முற்றாக சேதடைந்த யாழ். ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டைக்கும் பளைக்கும் இடையிலான ரயில் சேவை இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்பாணத்திற்கான ரயில் சேவையில் ஆர்வம் செலுத்தப்பட்டுள்ளது. பல மில்லியன் ரூபாய் செலவில் இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்படுகின்றது. எதிர்வரும் சித்திரை வருடத்தன்று புத்தாண்டு பரிசாக யாழ் மக்களுக்கு யாழ் வரையான ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் அக்காலத்தில் இலங்கையில் ரயில்வே துறையில் முக்கிய இடம்பிடித்திருந்தது. பயணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என எப்போதுமே பரபரப்பாக காணப்பட்ட ரயில் நிலையமும் அதனை அண்மித்த பகுதிகளும் யுத்தம் காரணமாக ஓய்ந்து போய் காணப்பட்டது. வடபகுதி ரயில் மார்க்கத்தின் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக விளங்கும் இந்த ரயில் நிலையத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் சேவைகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதி பளை பஸ் விபத்தில் 20ற்கு மேற்பட்டோர் காயம்-

palai_accident_002palai_accident_004

pallai-02palai_accident_006 

யாழ் – கொழும்பு ஏ9 வீதியில் பளை பகுதியில் பஸ் ஒன்று இன்றுகாலை 7 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களுக்கான தனியார் பஸ் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வேகமாக பயணித்த பஸ் பாதசாரி கடவையில் சென்ற மாணவர் ஒருவரை மோதியுள்ளதுடன் கட்டுப்பாட்டை இழந்து கடை தொகுதியுடனும் மோதியுள்ளது. இதனால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. விபத்தில் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களுள் 8பேர் பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. காயமடைந்த ஏனையவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்;ந்து கிளிநொச்சி பளை பிரதேசத்தில் போக்குவரத்து ஒழுங்குகள் பொலீசாரினால் முறையாக அமுலாக்கப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பில் ஆராய்வு-

காணாமற் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை தொடர்பில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டதாக அதன் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக ‘இல்லாமல் போயுள்ளார்’ என்ற சான்றிதழ் வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஆணையாளர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவிக்கையில், இறப்புச் சான்றிதழ் வழங்குவதைக் காணாமற் போனவர்களின் உறவினர்கள் உணர்வுபூர்வமாகப் பார்கின்றனர். அவர்கள் தமது உறவுகள் இன்னமும் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக இவ்வாறான சான்றிதழ் வழங்கும் பொறிமுறை பற்றி ஆராயப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இணையச் சேவையை இலவசமாக வழங்கத் திட்டம்-

untitledஉலகின் அனைத்துப் பகுதி மக்களும் இணையச் சேவையை எளிதாகவும் இலவசமாகவும் பெறக்கூடிய வகையில் புதிய திட்டத்தை நியூயோர்க்கை மையமாக கொண்ட முதலீட்டு நிதியம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளது. அதிக சேவைக் கட்டணம், தணிக்கை, கட்டுப்பாடு, தொலை தூரத்தை சென்றடைவதில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் அனைத்து நாட்டினரும் எளிதாக இணையத்தின் சேவையை பெற வசதியாக ‘அவுட்டர்நெட்’ என்ற புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது. குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த, செயற்கைக்கோளின் தயாரிப்புச் செலவு மட்டும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்முதல் 3இலட்சம் அமெரிக்க டொலர் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவை நன்கொடைகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா கடிதம்-

a00(3220)bயாழ் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி குலத்துங்க தெரிவித்துள்ளார். இலங்கை வந்த இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் விசேட பிரதிநிதிகள் நேற்றுமாலை அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், இவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 151 பேர் யாழ் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு தொடர்பில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதால், அது குறித்து குற்றம் சுமத்த இனி தம்மிடம் வார்த்ததைகள் இல்லை என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மனித் எச்சங்கள் தொடர்பில் புதிய தகவல்-

mannar_1மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைக்குழி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அனுராதபுரம் நீதிமன்ற விசேட வைத்தியர் எல்.டி.வைத்தியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். மனித புதைகுழியின் கீழ் பழமையான மயானம் ஒன்று காணப்படுவதாகவும், அதன் எலும்புக்கூடுகள் பல அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். மன்னார் மனித புதைக்குழியை தோண்டும் பணிகள் குறித்து நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த புராதன மயானம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அந்த புதைக்குழியை மீண்டும் தோண்டுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள அதிகாரிகளின் வீடுகள்மீது தாக்குதல்-

மதுவரி திணைக்கள ஆணையாளர் வசந்த ஹப்பு ஆராச்சியின் ஜா-எல பமுனுகமவில் உள்ள வீட்டுக்கும், மதுவரி திணைக்களத்தின் விசேட பரிசோதனைப் பிரிவின் பொறுப்பதிகாரி டொஸ்மன் பெர்னாண்டாவின் கொட்டாவை ருக்மல்கமவில் அமைந்துள்ள வீட்டுக்கும் இன்று அதிகாலை துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. எனினும் இருவரின் வீடுகளிலும் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சம்பவம் பற்றிய விசாரணைக்காக விசேட விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.