சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய காலம் வந்துள்ளது – நவநீதம்பிள்ளை-

navilpillaiஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்திருப்பதாக ஐக்கிய நாடகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் 25வது மனித உரிமைகள் மாநாட்டில் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம்-

india &tnaதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு விரைவில் இந்தியாவுக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா செல்லவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ராஜதந்திரிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழு ஜெனீவா பயணம்-

manitha urimai aanaikuluபொதுநலவாய நாடுகளின் அழைப்பையேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நாளைமறுதினம் 9ஆம் திகதி, ஜெனீவா பயணமாகவுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறையொன்று 9ஆம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை ஜெனீவாவிவ் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளிலிருந்து இப்பட்டறைக்கு பங்கு பற்றுநர்கள் வருகை தரவுள்ளனர். இலங்கையிலிருந்து செல்லும் குழுவினர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் 11ஆம் திகதி கலந்துகொள்வார்கள். மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் பிரியந்த பெரேரா தலைமையிலான குழுவில் 10 பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். வடக்கு மாகாணத்திலிருந்து ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜாவும், கிழக்கு மாகாணத்திலிருந்து கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்பும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் தேர்தல்களுக்கு மதிப்பில்லை-பவ்ரல்-

paffrelஇலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அடுத்தடுத்து நடத்தப்படுவதால், தேர்தல்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பில்லாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஒரே நேரத்தில் இல்லாமல், கட்டம் கட்டமாக தேர்தல்கள் நடத்தப்படுவதாலேயே இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய 562 முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசாங்க சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைபாடுகள் பதிவாகி இருப்பதாகவும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகளை தடுத்து வைக்கும் திட்டம் மாற்றப்பட வேண்டும்-நவிபிள்ளை-

navneethamஇலங்கை உள்ளிட்ட அகதிகளை பப்புவா நியுகினி மற்றும் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கும் அவுஸ்திரேலியாவின் திட்டத்தை மறுபிரசீலனை செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 25வது மனித உரிமைகள் மாநாட்டில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் தீவில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறையின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன் 30ம் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அந்த முகாமில்pருந்து அகதிகள் தப்பிச்செல்ல முற்படுகின்ற நிலையிலேயே இவ்வாறான வன்முறைகள் பதிவாகி உள்ளன. மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும் அதிகமாக நடைபெற்ற இலங்கை, சிரியா போன்ற நாடுகளிலிருந்தே அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசு அங்கு தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகளை தடுத்து வைப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு-

unnamed3இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை நீடிப்பு-

americaஅமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி-

sri &indiaஇலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி பாதுகாப்பின் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாலைதீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் முகம்மது நஜீம், பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தின்போது இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சிகள் தொடரும் என சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழில் ஏப்ரல் மாதம் கல்விமாநாடு-

northern-எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கல்வி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. வடமாகாண சபை நிறுவப்பட்டதன் பின்னர் வடமாகாண கல்வியமைச்சர் டி.குருகுலராஜா மற்றும் வடமாகாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கல்வியமைச்சில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் அதனோடு இணைந்து முரண்பாடுகள் குறுத்தும் ஆராயப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டை உயர்க்கல்வியமைச்சு, விளையாட்டு அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியன இணைந்தே நடத்தவிருக்கின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சிவில் பாதுகாப்பு குழுக்கள், கிராம உத்தியோகத்தர்களிடையே கலந்துரையாடல்-

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. யாழ் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்னர். நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தென்மராட்சி, காரைநகர் ஆகிய பிரதேச செயலகங்களின் கிராம உத்தியோகத்தர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர். நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.