சர்வதேச மகளிர் தினம்-
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. அவளின் சக்தி, தேசத்தின் சக்தி எனும் தொனிப்பொருளில் இம்முறை இலங்கையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினம் முதன்முறையாக 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனம் செய்யப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசோகா அலவத்த தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2013ஆம் ஆண்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூதூர் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்-
திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றையதினம் உரையாற்றிய பிரான்ஸின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். மூதூரில் வைத்து 2006ம் ஆண்டு பிரான்ஸின் பட்டினிக்கு எதிராக அமைப்பின் 17 தொண்டு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். அது தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்றும், இந்த நிலையில் குறித்த விசாரணையை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் பிரதிநிதி கோரியுள்ளார்.
டஸ்மன் டுட்டுவின் கடிதத்தை கருத்தில் கொள்க – பிரட் எடம்ஸ்-
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், தென்னாபிரிக்காவின் முன்னாள் பேராயர் டஸ்மன் டுட்டுவின் கடிதத்தை கருத்திற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசிய பிராந்திய பணிப்பளர் பிரட் எடம்ஸ் இதனைக் கூறியுள்ளார்.டஸ்மன் டுட்டுவின் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் மற்றும் பல்வேறு நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.
அமெரிக்க பிரேரணை ஆராயப்படுகிறது – இந்தியா
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அமெரிக்க பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரேரணை குறித்து இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையீட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த பிரேரணையின் எழுத்து வடிவம் கிடைக்கப்பெறாமல், அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என்று இந்திய தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த பிரேணையின் பிரதி கிடைத்துள்ள நிலையில், அது குறித்த தீர்மானத்தை இந்தியா விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்திய லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பிரேரணை குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வவுனியாவிலிருந்து யாழ் சென்ற பஸ்மீது தாக்குதல்–
வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இரணைமடு பகுதி உணவகத்தில் உணவிற்காக பஸ் நிறுத்தப்பட்டிருந்தவேளை யாழிலிருந்து சென்ற ‘கப்’ ரக வாகனம் ஒன்றில் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த பயணிகளை சிங்களத்தால் திட்டியுள்ளனர். அனைவரையும் சுடப்போவதாக மிரட்டியதோடு தமிழ் இனத்தையும் புலிகளையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரி நாகேந்திரம் புஸ்பவசந்தன் என்பவர் அதைத் தட்டிக்கேட்டார். அதன்போது அவரை ‘கப்’ வாகனத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதோடு அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜெனீவா யோசனைக்கு ஆதரவான அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை-
இலங்கைக்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள இலங்கைக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக செயற்படும் இலங்கையில் 24 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தெரியவருகிறது. மேற்படி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நோர்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த நிறுவனங்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா பயணம்-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா பயணமாகவுள்ளார். இந்நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க களுத்துறையில் நேற்று ஊடகவியாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு அவர் பேசும்போது, எம்மீது பொறாமைப்பட்டு, குரோத மனபான்மையுடன் நம்மை அடிமைப்படுத்துவதற்காகவே சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இவ்வாறு தீர்மானங்களை முன்வைப்பதற்கு முற்படுகின்றனர். நமது நாட்டிற்கு எதிராக செயற்படும் சர்வதேச சக்திகள் மற்றும் எமக்கு எதிராக பொய் கூறும் நவனீதம்பிள்ளை ஆகியோர் கூறுவதற்காக இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்க முடியாது. யாராவது தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவம் தயாராகவே உள்ளது. இலங்கையின் குழு என்ற வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைகளுடன் உறுதியான நிலைப்பாட்டுடன் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
239 பேருடனான வானூர்தி வியட்னாம் கடலில் வீழ்ந்தது-
239 பேருடன் மலேசியாவில் இருந்து பீஜிங் நோக்கி பயணித்த நிலையில் காணாமல் போன வானூர்தி வியட்னாம் கடற்பரப்பில் வீழ்ந்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நேமின்- ஃபூ – க்வோக் தீவிலிருந்து 153 கடல்மைல்களுக்கு அப்பால் இந்த வானூர்தி வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் வானூர்தியில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளுடன், 12வானூர்தி அதிகாரிகளும் பயணித்திருந்தனர். அவர்களில் 153பேர் சீனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வானூர்தியில் இலங்கையர்கள் யாரும் இருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த வானூர்தி கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டதன் பின்னர், அது குறித்த தகவல்களை அறியமுடியாதிருந்தது. இதனால் அவ் வானூர்தியை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையிலேயே குறித்த வானூர்தி வியட்னாம் கடற்பரப்பில் வீழ்ந்திருப்பது வியட்னாம் கடற்படை ராடர் கருவியில் பதிவாகியுள்ளதாக வியட்னாம் கடற்படை அறிவித்துள்ளது. அத்துடன் வானூர்தியில்; பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகமொன்று கூறுகின்றது.
இந்திய மீனவர்கள் 17பேர் விடுதலை-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் 8 படகுகளுடன் நேற்று இலங்கை இந்திய கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மீனவர்கள் அனைவரும் காரைக்கால் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.