தேராவில் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-
முல்லைத்தீவு தேராவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி வழங்கும் நிகழ்வில் கடந்த 22.02.2014 அன்று பங்கேற்றிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைவாக தேராவில் பிரதேச மாணவர்களுக்கு சுவிஸில் வசிக்கும் வரதன் பாமா குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் கற்றல் உபகரணங்கள் கடந்த 05.03.2014 அன்று அதிரடி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் போராளியின் இசை வளர்ச்சிக்கு கோவில்குளம் இளைஞர் கழகம் உதவி-
முல்லைத்தீவு தேராவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர்க்கான உதவி வழங்கும் நிகழ்வில் கடந்த 22.02.2014 அன்று பங்கேற்றிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் தொடர்பில் அங்கு விரிவாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது நகுலேந்திரன் நிமால் என்கிற யுத்தத்தினால் இரு கால்களையும் இழந்த முன்னாள் போராளி, தனது இசை ஆர்வம் மற்றும் இசைக் கலையகம் ஒன்றை அமைப்பதற்கு புலம்பெயர் உறவுகளின் ஊடாக உதவி வழங்குமாறு புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டிருந்தார்.’
இதன்படி கோயில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்கக் கிளையினரால் அவருக்கான நிதியுதவி கடந்த 05.03.2014 அன்று அதிரடி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது. புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதான கட்சிகள் தெரிவுக்குழுவிற்கு அவசியம்-தேசிய சமாதான சபை-
தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்நுக் கொள்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என தேசிய சமாதான சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முறைமை ஒன்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த சபை கோரியுள்ளது. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது, கடந்த இரண்டு வருடங்களை விட சிறந்த ஒன்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வட கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மாத்திரமின்றி ஏனைய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய சமாதான சபை மேலும் தெரிவித்துள்ளது.
பிரேரணை தொடர்பில் விசேட அறிக்கையினை வெளியிட நடவடிக்கை-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் வெளியிடவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்தி ஊடகம் ஒன்றினால் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் பிரேரணையை தற்போது இந்தியா ஆராய்ந்து வருகிறது. இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களையும், இலங்கையில் தற்போதையை அரசியல் மற்றும் மறுசீரமைப்பு நிலைமைகளையும் ஒப்பு நோக்கியதாக இந்த அறிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் அறிக்கையில் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? இல்லையா என்றும், தாம் மேற்கொள்கின்ற தீர்மானத்துக்கான காரணம் தொடர்பிலும் விளக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மட்டக்களப்பில் காணாமல் போனோர் பற்றிய அடுத்தகட்ட அமர்வுகள்-
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன. மூன்று பிரதேச செயலகங்களின் கீழ், ஆணைக்குழுவின் விசாரணை பதிவுகள் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். செங்கலடி, வாழைச்சேனை, மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் விசாரணைப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள விசாரணைப் பதிவுகளுக்காக சுமார் 150பேருக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு வலயங்கள்-
வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது நான்கு வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகர திட்டம் உட்பட பல பாரிய திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக துறைமுக நகர திட்டத்திற்காக 100 கோடி அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அபிவிருத்தி கொள்கை திட்ட வரைமுறைக்கு அமைய செயல்பட முன்வரும் முதலீட்டாளர்களுக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை அமைச்சு வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கை – ரஷ்ய வர்த்தக உறவில் பாதிப்பில்லை-
உக்ரேனில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இலங்கைக்கும் ரஷ்யா உட்பட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் உடனடி பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது என ஏற்றுமதி தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை இந்த நாடுகளுக்கு தைக்கப்பட்ட ஆடைகள், தேயிலை மற்றும் பல ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. ரஷ்யா இலங்கையில் இருந்து தேயிலையினை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றது. இலங்கையில் இருந்து உக்ரேன் தைக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்கின்ற பொழுதிலும், அது சிறியளவிலேயே இடம்பெறுவதாக இலங்கை தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அது அதிக அளவில் இலங்கை ஏற்றுமதியினை பாதிக்கப் போவதில்லை என தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை அமுலாக்கலுக்கு ஜப்பான் நிதியுதவி-
இலங்கையில் மும்மொழி கொள்கையை அமுலாக்கும் வேலைத்திட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது. இரண்டு கட்ட வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கு மும்மொழிகளிலும் பயிற்சியளிக்கும் பொருட்டு, 80.24 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான கற்கை நூல்களை அச்சிடுதல் போன்ற பணிகளுக்காக 20 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரிச்சிக்கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்-
காணி சுவீகரிப்புக்கு எதிராக மன்னார் – மரிச்சிக்கட்டி கிராமம், மரைக்கார் தீவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த பிரதேச மக்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் நிலையில், தங்களுக்கான காணி உறுதிகளை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வாக்குச் சீட்டுகள் அச்சிடுதல் நிறைவு-
தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாக்குச் சீட்டுகளின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தற்போது தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களின் உதவி தேர்தல்கள் காரியாலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், தேர்தல் தொகுதிகளுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக 57பேர் கைது-
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை சட்டவிரோத பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனங்கள் 20 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸ் திணைக்களத்திற்கு 60 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுவதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.