க.மு தம்பிராசாவின் போராட்டம் 17ஆவது நாளாகவும் தொடர்கிறது-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் 17ஆவது நாளாக தொடர்கின்றது. 

இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் கூறுகையில்,  வட கிழக்கில் வாழுகின்ற எனது உயிரிலும் இனிய தமிழ் உறவுகளே!

வலி வடக்கு, சம்பூர் கிராம மக்களின் மக்களுக்குரிய உறுதிக் காணிகளில் அவர்களின் குடியேற்றத்திற்காகவும், ஏற்கனவே உறுதிமொழி வழங்கப்பட்ட உலருணவு மற்றும் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும், மிக நீண்டகாலமாக சிறைகளில் எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மற்றும் காணாமற் போனவர்கள் என அடையாளமிடப்பட்டு திரைமறைவு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது உறவுகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரியும் இந்த காலவரையறையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று 17ஆவது நாளாகவும் தொடர்கின்றேன்.

16ஆவது நாளான நேற்றையதினம் யாழ்ப்பாண மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மேரியம்மா அவர்களின் தலைமையில், ஜெயபாலன், சோதிலிங்கம், ராஜதேவன், மரியகொறட்ரி, கொருனலியஸ் ஆகியோர் நேரடியாக வருகைதந்து தங்களது ஆதரவினை எனது போராட்டத்திற்கு தெரிவித்திருந்தார்கள். ஆயினும்; யாழ் மாநகரசபை உறப்பினர்களான ஜேக்கப் மற்றும் தங்கராஜா ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் தங்களால் வருகைதர முடியவில்லையென்பதைத் தெரிவித்தனர்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அங்கத்தவரான மீசாலையைச் சேர்ந்த சயந்தனும் நேற்றையதினம் வருகை தந்து எனது போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக உலருணவு நிறுத்தப்பட்டு சோறின்றி, சொந்த மண்ணுமின்றி, அதை சொல்லியழ சுதந்திரமுமின்றி முகாம்களில் முடக்கப்பட்டுள்ள சம்பூர் மக்களின் துயரத்தில் என்னையும், எமது மக்களையும் ஒன்றிணைத்த, ஒன்றுபட்ட தமிழ் உறவினால் ஏற்பட்டுள்ள வட கிழக்கு தமிழ் மக்களின் பிணைப்பை, வட கிழக்கு இணைந்த பூர்வீக தமிழர் தாயகத்தை வெறும் எல்லைகளை கொண்டு பிரிக்க முடியாதென்பதை எனது சாகும் வரையிலான உண்ணா நோன்பின் ஊடாகவும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலமாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றேன்.
அனைத்து தமிழ் மக்களது ஆதரவையும் ஒன்றுதிரட்டி, கட்சி வேறுபாடில்லாது தமிழ் மக்களுக்குரிய உயிர்ப் பிரச்சினையான இந்த மீள்குடியேற்றம், உலருணவு, சிறைக்கைதிகள் விடுதலை, காணாமற் போனவர்கள் விடுதலை இப்பேர்ப்பட்ட அனைத்தையும் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்து, இதனை வெகுஜன மக்கள் போராட்டமாக மாற்றி இலங்கை அரசுக்கும், அரச படைகளுக்கும் எமது பலத்தையும், எமது உறுதியையும் மீண்டும் ஒருமுறை தெரிவிக்கும் முகமாக அனைவரையும் ஒன்று சேர்ந்து கரம் தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி (க.மு.தம்பிராசா)