யாழ்தேவி மோதி தந்தையும் மகனும் பலி

train_accident_001இன்று காலை பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில், வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்த குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரம் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினைக் கடக்க முற்பட்ட தந்தையையும், மகனையும் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தவிபத்தில், வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோரே பலியாகியுள்ளனர். நெடுங்கேணியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் மனைவியை ஏ-9  பாதையில் இறக்கி விட்டு மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும் நோக்கோடு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

வீதிப் புனரமைப்பு வேலைகளால் பாதிப்பு முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

_mullaitheevumullaitheevu_முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் முப்பது வருடங்களாகப் புனரமைக்கப்படாத ஒரு முக்கிய வீதி புனரமைக்கப்பட்டு புதிதான நிர்மாணம் செய்யப்பட்டுள்ள போதிலும், மல்லாவி நகர வர்த்தகர்களுக்கும் பொதுமக்களக்கும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறி வெள்ளியன்று அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ‘மல்லாவி கடைவீதி ஊடான பிரதான வீதி நான்கு நாலரை அடி உயரம் உயத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டிருப்பதனால், கடைகளுக்கு மக்கள் செல்ல முடியாதுள்ளது. கடைவீதிக்கு வருபவர்கள் தங்களுடைய சைக்கிள்கள் உட்பட வாகனங்களை நிறுத்தவும் முடியாது. அதற்கான இடம் கிடையாது. உயர்த்தப்பட்டுள்ள வீதியில் இருந்து கடைகள் பள்ளத்தில் இருப்பதனால், கடைகள் ஒரத்தில் புதிய சிறிய வீதி அமைக்கப்படுகின்றது. இதில் கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று இறக்கவும் முடியாதுள்ளது இந்த வீதியின் உயரத்தைக் குறைத்து முன்பு இருந்த வீதியின் மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருவழிப்பாதை அமைத்துத் தரவேண்டும் என்பதே எமது கோரிக்கை. வீதி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் தெரிவித்திருந்த ஆலோசனைகள் அதிகாரிகளினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் பலரும் தெரிவித்தனர். இந்த வீதிப் பிரச்சினை குறித்து பதிலளித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், இந்த வீதி அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலேயே இதுபற்றி தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும: எனினும் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டுள்ள வசதியீனங்கள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய மாற்று ஒழுங்குகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் வடமாகாணம் இராணுவமயமாக இருந்துவருவதால் பெண்கள் பாதிக்கப்படகின்றார்கள் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

womensjaffna_womens_day_005சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரால் யாழ்ப்பாணம் நல்லூரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகான முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் உரையாற்றுகையில் ‘வடமாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டு – ள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் அவர்களின் இயற்கையான சுதந்திர நடமாட்டம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. பல பெண்குழந்தைகள் கல்வி, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள இப்பாதுகாப்பின்மை தடையாக இருந்து வருகிறது. மருத்துவ வசதிகளை நாடிச் செல்வது கூடத் தடைப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் காவற்துறையினரால் அசட்டையுடனேயே கையாளப்படுகின்றன’ என குறிப்பிட்டார். வன்னிப் பிரதேசத்தில் இளைஞர்கள் பெருமளவில் இருக்கின்ற போதிலும், இளம் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கேள்விகள் எழுந்திருப்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ‘அண்மையில் இராணுவத்திற்குத் தமிழ்ப் பெண் யுவதிகளைச் சேர அழைத்துள்ளார்கள். ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்ற கேள்வி உடனேயே எழுகிறது. அது மட்டுமல்ல் இளம்பெண்களை வீடுவீடாகச் சென்று வலிந்து இராணுவத்தினர் அழைப்பதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. பயம், வறுமை, பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் எம் பெண்கள் இராணுவத்துக்குள் உள்ளீர்க்கப்படக் கூடும். ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவக் கீழ்மட்டச் சிப்பாய்களின் கடமை என்பதை இந்த யுவதிகள் தெரிந்திருக்கின்றார்களா என்பது எமக்குத் தெரியாதிருக்கின்றது.’ போரினாலும், போருக்குப் பின்னரும் பாதிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலைமையில், மாற்றம் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்